ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யில் பெரும்பகுதிக்குத் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
பிரசல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இதனையடுத்து, கடல்வழியாக இறக்குமதி செய்யப்படும் ரஷ்ய எண்ணெய்யில் மூன்றில் இரு மடங்குக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படும் என்றும் அதனால் உக்ரேன் மீதான போரைத் தொடர முடியாத வகையில் ரஷ்யாவிற்குப் பெரும் நிதி ஆதாரம் தடைபடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல், டுவிட்டர் வழியாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் ரஷ்ய இறக்குமதி எண்ணெய் அளவில் 90 விழுக்காட்டைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதித் தடையில் இருந்து ஹங்கேரிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஹங்கேரி, ரஷ்யாவிடம் இருந்து குழாய் வழியாக வரும் எண்ணெய்யைப் பெரிதும் சார்ந்திருக்கிறது.
முன்னதாக, ரஷ்யாமீது ஒட்டுமொத்தமாக எண்ணெய் இறக்குமதித் தடை விதிக்க ஹங்கேரி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன், ரஷ்ய எண்ணெய் இறக்குமதித் தடையால் பொருளியலில் ஏற்படும் தாக்கம் குறித்தும் சில நாடுகள் கவலை தெரிவித்தன.
ரஷ்யாவின் ஆகப் பெரிய வங்கியான 'ஸ்பெர்பேங்க்'கை 'ஸ்விஃப்ட்' பணப் பரிவர்த்தனை அமைப்பிலிருந்து நீக்குவது என்றும் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான மேலும் மூன்று ஒலிபரப்பு நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
எரிவாயு விநியோகம் நிறுத்தம்
இதனிடையே, நெதர்லாந்திற்குக் குழாய் வழியாக இயற்கை எரிவாயு அனுப்புவதை நிறுத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அடுத்ததாக, டென்மார்க்கிற்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி எரிவாயுக்கு ரஷ்ய நாணயமான ரூபிளில்தான் பணம் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விதித்த நிபந்தனையை நெதர்லாந்தின் கேஸ்டெரா பிவி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
முன்னதாக, இந்நிபந்தனைக்கு உடன்படாததால் போலந்து, பல்கேரியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் ரஷ்யாவின் கேஸ்புரோம் நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிட்டது.
எண்ணெய் விலை ஏற்றம்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவுசெய்துள்ளதை அடுத்து, ஆசியச் சந்தைகளில் நேற்று எண்ணெய் விலை கூடியது.
இதனிடையே, அதிகரித்துவரும் எண்ணெய் விலையைக் குறைக்க எண்ணெய் உற்பத்தியை விரைந்து அதிகரிக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை 'ஓபெக் பிளஸ்' எனும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

