மலேசிய பிரதமர்: முன்கூட்டியே தேர்தல் நடத்த சாத்தியமில்லை

மலேசிய பிரதமர்: முன்கூட்டியே தேர்தல் நடத்த சாத்தியமில்லை

2 mins read

உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை­யும் வாழ்க்­கைச் செல­வி­னங்­களும் உயர்ந்­து­வ­ரும் நிலை­யில், மலே­சியா­வில் முன்­கூட்­டியே பொதுத் தேர்­தல் நடத்த வாய்ப்­பில்லை என்று மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­து இருக்கிறார்.

அடுத்த ஆண்­டிற்­கு­முன் மலே­சி­யா­வில் தேர்­தல் நடத்த வேண்­டி­ய­தில்லை. ஆனா­லும், அண்­மைய சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் ஆளும் அம்னோ கட்­சிக்கு நல்­லா­த­ரவு கிட்­டி­யதை அடுத்து, அதைச் சாத­க­மாக்­கிக்­கொள்­ளும் வகை­யில் பொதுத் தேர்­த­லை­யும் முன்­கூட்­டியே நடத்த வேண்­டும் என்று பிர­தமர் இஸ்­மா­யிலை அம்னோ நெருக்­கு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பொதுத் தேர்­தல் குறித்து அறி­விக்க சரி­யான நேரத்­திற்­குக் காத்­தி­ருப்­பேன் என்று நிக்கேய் ஊட­கத்­திற்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

"விலை­வா­சி­யும் பண­வீக்­க­மும் அதி­க­ரித்து வரும் கால­கட்­டத்­தில் இருக்­கி­றோம். இது பொதுத் தேர்­தல் நடத்­து­வ­தற்­குச் சரி­யான நேரம் என்று நினைக்­கி­றீர்­களா?" என்று பிர­த­மர் இஸ்­மா­யில் கேட்­ட­தாக நிக்­கேய் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த ஏப்­ரல் மாதம் உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை 4.1% கூடி­யதை அடுத்து, இவ்­வாண்­டில் நாட்­டின் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 2.3 விழுக்­காட்­டில் இருந்து 3.2 விழுக்­காட்­டிற்­குள் இருக்­கும் என்று மலே­சிய மத்­திய வங்கி எதிர்­பார்க்­கிறது.

முன்­ன­தாக, பண­வீக்­கத்­தைக் குறைக்­கும் நோக்­கில் யாரும் எதிர்­பா­ராத வகை­யில் முக்­கிய வட்டி விகி­தத்தை மத்­திய வங்கி அண்­மை­யில் உயர்த்தி அறி­வித்­தது.

அத்­து­டன், விலைக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளை­யும் மலே­சிய அரசு அறி­வித்­துள்­ளது.

ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்த ஆர்வம்

இந்த நிலை­யில், பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்­டும் அறி­முகப்­ப­டுத்த தமது அர­சாங்­கம் ஆர்­வ­மாக இருப்­ப­தாக பிர­த­மர் இஸ்­மா­யில் கூறி­னார்.

கடந்த 2015ஆம் ஆண்­டில் மலே­சி­யா­வில் அப்­போ­தைய அம்னோ அரசு ஜிஎஸ்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஆயி­னும், அந்த 6% வரியே விலை­வாசி உயர்­விற்­குக் கார­ணம் எனப் பொது­மக்­கள் சாடி­னர். இத­னை­ய­டுத்து, மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு டாக்­டர் மகா­தீர் முகம்­மது தலை­மை­யி­லான அர­சாங்­கம் ஜிஎஸ்­டியை ரத்து செய்­தது.

ஜிஎஸ்­டிக்கு மக்­க­ளி­டத்­தில் ஆத­ரவு இல்லை என்­பதை அர­சாங்­கம் அறிந்­தி­ருந்­தா­லும் அவ்­வரி ரத்து செய்­யப்­பட்ட பிறகு அர­சாங்­கத்­தின் ஆண்டு வரு­வா­யில் 20 பில்­லி­யன் ரிங்­கிட் (S$6.26 பில்­லி­யன்) இழப்பு ஏற்­பட்­டதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

மக்­க­ளுக்­குச் சுமை­யாக விளங்­காத வகை­யில் ஜிஎஸ்டி வரி­வி­கி­தத்தை நிர்­ண­யிக்க அர­சாங்­கம் இலக்கு கொள்­ளும் என்­றும் அதே நேரத்­தில் வரி வரு­வா­யைப் பெருக்க வேண்­டும் என்­ப­தால் அது மிகக் குறை­வா­க­வும் இராது என்­றும் பிர­தமர் இஸ்­மா­யில் சொன்­னார்.

மலே­சியா இவ்­வாண்­டில் மட்­டும் எரி­பொ­ருள் மானி­ய­மாக 28 பில்­லி­யன் ரிங்­கிட்­டைச் செல­விட வேண்­டி­யி­ருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சென்ற ஆண்­டில் 11 பில்­லி­யன் ரிங்­கிட் எரி­பொ­ருள் மானி­ய­மாக வழங்­கப்­பட்­டது.