அனைத்துவித கைத்துப்பாக்கிகளையும் வாங்கவும் விற்கவும் முடியாதபடி கனடாவில் ஒட்டுமொத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (படம்) அறிவித்துள்ளார்.
தனிமனிதர்கள் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையை முடக்கும் நோக்கில் கனடிய அரசாங்கம் புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அச்சட்டம், கைத்துப்பாக்கி வைத்திருப்பதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யாது. ஆனால், அவற்றை வாங்குவதைச் சட்டவிரோதமாக்கும்.
கனடாவின் அண்டை நாடான அமெரிக்காவின் டெக்சஸில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் அண்மையில் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டில் 19 பிள்ளைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, கனடாவில் புதிய சட்டம் இயற்றப்படவுள்ளது.
கனடிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முன்மொழியப்பட்ட அச்சட்டத்தின்படி, அந்நாட்டின் எப்பகுதியிலும் கைத்துப்பாக்கி வாங்கவோ விற்கவோ கொண்டு செல்லவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது.
"விளையாட்டிற்காகவும் வேட்டைக்காகவும் தவிர்த்து, அன்றாட வாழ்க்கையில் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் கனடாவில் ஒருவர் கைத்துப்பாக்கி வைத்துஇருக்க வேண்டிய தேவை இல்லை," என்றார் திரு ட்ரூடோ.
துப்பாக்கி வன்முறை தொடர்ந்து அதிகரிப்பதைக் காணும்போது, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தங்களது கடமை என்றும் இவர் சொன்னார்.
புதிய சட்டப்படி, குடும்ப வன்முறை அல்லது குற்றவியல் துன்புறுத்தல் சம்பவங்களில் தொடர்புடையோர் எவரேனும் துப்பாக்கி வைத்திருந்தால் அவர்களின் துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
அமெரிக்காவைப் போலன்றி, துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்து கனடிய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும், துப்பாக்கி வைத்து இருப்பதைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவில் கடுமையான விதிமுறைகள் நடப்பிலுள்ளன. அதனால், ஆண்டுதோறும் அமெரிக்காவைவிட குறைவான துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களே அங்கு பதிவாகின்றன.
ஆனாலும், உயிரிழப்பை ஏற்படுத்திய பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, கனடாவில் துப்பாக்கி உரிமைச் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று அண்மைய ஆண்டுகளாக குரல்கள் எழுந்தன.
கனடாவின் நோவா ஸ்கோஷாவில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் துப்பாக்கிக்காரன் ஒருவன் 22 பேரைச் சுட்டுக்கொன்றான். கனடிய வரலாற்றில் இதுவே ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம். அதன்பின் சில நாள்களுக்கு உள்ளாகவே, அங்கு 1,500 வகை ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப் பட்டது.

