என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கோழியுள்ள பை ஒன்று $72.27க்கு விற்கப் பட்டது, இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மலேசியாவின் தற்காலிக கோழி ஏற்றுமதித் தடை நடப்புக்கு வந்தது.
அதற்கு முதல் நாளான மே 31ஆம் தேதி, கோழிப் பையின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.
'எஸ்பி முழுக் கோழி' என்று பெயர்கொண்ட கோழிப் பை ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் $72.27க்கு விற்கப்பட்டதை அவை காட்டின.
பையின் எடை 3.212 கிலோகிராம் என்றும் ஒரு கிலோகிராம் கோழி $22.50க்கு விற்கப்படுவதாகவும் அதில் இருந்த வில்லை குறிப்பிட்டது.
ஒப்புநோக்க கோழியின் விலை சாதாரணமாக ஒரு கிலோகிராம் 4 வெள்ளி முதல் 5 வெள்ளி வரைக்கும்தான் உள்ளது.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் இது உண்மையா பொய்யா அல்லது விற்கப்பட்டது வான்கோழியா என்றெல்லாம் சந்தேகத்தை எழுப்பினர்.
சிலர் எடைநிறுத்தும் இயந்திரம் பழுதாகி இருக்குமோ என்றனர்.
ஆனால் படத்தில் இருந்த தகவல்கள் உண்மைதான் என்று ஃபேர்பிரைஸ் வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.
பையில் இரண்டு கோழிகள் இருந்ததாகவும் அவை ரசாயனம் சேர்க்காத தீவனம் உண்ணும் 'ஆர்கானிக்', 'கம்போங்' கோழிகள் என்றும் அது குறிப்பிட்டது.
அதை தனது பேரங்காடிக் கிளைகளில் தனியாக முகப்பு வைத்து செயல்படும் சுவிஸ் புட்சரி (Swiss Butchery) எனும் நிறுவனம் விற்றதாகவும் ஃபேர்பிரைஸ் கூறியது.
சுவிஸ் புட்சரி உயர்மதிப்பு உள்ள பொருள்களை ஃபேர்பிரைசில் விற்று வருகிறது.
இரண்டு கோழிகள் ஒரே பையில் வைக்கப்பட்டு இருந்ததால் பையின் எடை 3 கிலோ என்று குறிப்பிட்டதாக ஃபேர்பிரைஸ் கூறியது.
ஆனால் ஃபேர்பிரைஸ் இதை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில மணிநேரத்தில் அது தீ போல பரவியது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அந்தப் பதிவு 1,100 முறை பகிரப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது.
கோழியின் விலை மிகவும் அதிகம் என்று பதிவுக்குக் கீழே கருத்துரைத்த சிலர் கூறினர்.
கூண்டில் அடைக்காது சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கப்படும் கம்போங் கோழி என்றாலே விலை அதிகம்தான்; ஆனால் இது அளவுக்கு அதிகம் என்றனர் வேறு சிலர்.
ஒருசிலரோ வாங்குபவர்கள் எந்த விலைக்கும் வாங்குவார்கள் என்று ஃபேர்பிரைசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள்.

