எழுத்துக்கோவைப் போட்டி: மகுடம் சூடிய இந்திய வம்சாவளிச் சிறுமி

2 mins read
b81cb98d-2186-49f0-9cfc-f4829fa80a45
வெற்றியாளர் கிண்ணத்துடன் ஹரிணி லோகன். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெ­ரிக்க தேசிய எழுத்­துக்­கோவை (ஸ்பெல்­லிங் பீ) போட்­டி­யில் இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த ஹரிணி லோகன், 14, எனும் சிறுமி வாகை சூடி­னார்.

வெளி­நா­டு­களில் உள்­ளூர் அள­வில் பட்­டம் வென்­றோர், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்­தோர் என மொத்­தம் 235 பேர் இம்­முறை பங்­கேற்ற இப்­போட்­டி­யில் வெற்­றி­யா­ளர் பட்­டம் வென்ற ஹரி­ணிக்கு ரொக்கம், பரிசுப்பொருள்கள் என மொத்தம் 52,500 அமெ­ரிக்க டாலர் பரிசாகக் கிட்­டி­யது.

டெக்­சஸ் மாநி­லத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்­டாம் வகுப்பு பயின்று வரு­ம் ஹரிணி, இப்­போட்­டி­யில் பங்­கேற்­றது நான்­கா­வது முறை. இதற்குமுன் 2018ஆம் ஆண்­டில் 323ஆம் இடத்­தைப் பிடித்த இவர், 2019ல் 30ஆம் இடத்­தி­லும் 2021ல் 31ஆம் இடத்­தி­லும் வந்­தார்.

இறு­திச்­சுற்­றுக்கு முன்­னே­றிய 14 பேரில் 11 பேர் இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இரண்­டா­மி­டம் பிடித்த விக்­ரம் ராஜுக்கு 25,000 டால­ரும் மூன்­றா­வ­தாக வந்த விகான் சிப­லுக்கு 15,000 டால­ரும் பரி­சாக வழங்­கப்­பட்­டன.

1985ஆம் ஆண்டு நடந்த போட்­டி­யில் பாலு நட­ரா­ஜன் வென்­ற­தில் இருந்து, இது­வரை 20 முறை இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர் அமெ­ரிக்க தேசிய எழுத்­துக் கோவை வெற்றி­யா­ளர் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­ உள்­ள­னர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்­டு­வரை தொடர்ந்து இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரே பட்­டம் வென்­ற­னர். 2019ஆம் ஆண்­டில் மொத்­தம் எட்­டுப் பேர் வெற்­றி­யா­ளர் பட்­டத்­தைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். அவர்­களில் ஒரு சிறு­மி­யைத் தவிர, மற்ற எழு­வ­ரும் இந்­திய வம்­சா­வளி­யி­னர்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக 2020ஆம் ஆண்­டில் இப்­போட்டி நடத்­தப்­ப­ட­வில்லை.

2021ஆம் ஆண்டு நடந்த போட்­டி­யில் 14 வயதான ஸைலா அவான்ட் கார்டே எனும் சிறுமி பட்டம் வென்றாள். கறுப்பின அமெரிக்கச் சிறுமி ஒருத்தி பட்டம் வென்றது அதுவே முதன்முறை.

ஒரு சொல்­லைச் சரி­யாக எழுத்­துக்­கூட்­டிச் சொல்­லும் திறனை மட்­டு­மன்றி, அதன் தோற்­றம், அமைப்பு, பயன்­பாடு ஆகிய திறன்­க­ளை­யும் இப்­போட்டி சோதிக்­கிறது.

இம்­முறை இறு­திப்­போட்­டி­யில் ஹரி­ணிக்­கும் விக்­ர­முக்­கும் இடையே கடும் போட்டி நில­வியது.

இத­னை­ய­டுத்து, வெற்­றி­யா­ள­ரைத் தீர்­மா­னிக்க விரை­வுச்­சுற்று முறை பின்­பற்­றப்­பட்­டது. 90 நொடி­க­ளுக்­குள் அதி­க­மான சொற்­க­ளைச் சரி­யா­கச் சொல்­லு­மாறு இரு­வ­ரும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். அதில் ஹரிணி 21 சொற்­களை­யும் விக்ரம் 15 சொற்­களை­யும் சரி­யா­கக் கூறி­னர்.

அமெரிக்கத் துணை அதிபரும் இந்திய வம்சாவளியினருமான கமலா ஹாரிசை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார் ஹரிணி.

இட­பிள்யூஸ்கி­ரிப்ஸ் மீடியா நிறு­வ­னம் 1925ஆம் ஆண்­டி­ல் இருந்து இந்த எழுத்­துக்­கோ­வைப் போட்­டியை நடத்தி வரு­கிறது.