அமெரிக்க தேசிய எழுத்துக்கோவை (ஸ்பெல்லிங் பீ) போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிணி லோகன், 14, எனும் சிறுமி வாகை சூடினார்.
வெளிநாடுகளில் உள்ளூர் அளவில் பட்டம் வென்றோர், அமெரிக்காவைச் சேர்ந்தோர் என மொத்தம் 235 பேர் இம்முறை பங்கேற்ற இப்போட்டியில் வெற்றியாளர் பட்டம் வென்ற ஹரிணிக்கு ரொக்கம், பரிசுப்பொருள்கள் என மொத்தம் 52,500 அமெரிக்க டாலர் பரிசாகக் கிட்டியது.
டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் ஹரிணி, இப்போட்டியில் பங்கேற்றது நான்காவது முறை. இதற்குமுன் 2018ஆம் ஆண்டில் 323ஆம் இடத்தைப் பிடித்த இவர், 2019ல் 30ஆம் இடத்திலும் 2021ல் 31ஆம் இடத்திலும் வந்தார்.
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 14 பேரில் 11 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாமிடம் பிடித்த விக்ரம் ராஜுக்கு 25,000 டாலரும் மூன்றாவதாக வந்த விகான் சிபலுக்கு 15,000 டாலரும் பரிசாக வழங்கப்பட்டன.
1985ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பாலு நடராஜன் வென்றதில் இருந்து, இதுவரை 20 முறை இந்திய வம்சாவளியினர் அமெரிக்க தேசிய எழுத்துக் கோவை வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரே பட்டம் வென்றனர். 2019ஆம் ஆண்டில் மொத்தம் எட்டுப் பேர் வெற்றியாளர் பட்டத்தைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒரு சிறுமியைத் தவிர, மற்ற எழுவரும் இந்திய வம்சாவளியினர்.
கொவிட்-19 தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் இப்போட்டி நடத்தப்படவில்லை.
2021ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 14 வயதான ஸைலா அவான்ட் கார்டே எனும் சிறுமி பட்டம் வென்றாள். கறுப்பின அமெரிக்கச் சிறுமி ஒருத்தி பட்டம் வென்றது அதுவே முதன்முறை.
ஒரு சொல்லைச் சரியாக எழுத்துக்கூட்டிச் சொல்லும் திறனை மட்டுமன்றி, அதன் தோற்றம், அமைப்பு, பயன்பாடு ஆகிய திறன்களையும் இப்போட்டி சோதிக்கிறது.
இம்முறை இறுதிப்போட்டியில் ஹரிணிக்கும் விக்ரமுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதனையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க விரைவுச்சுற்று முறை பின்பற்றப்பட்டது. 90 நொடிகளுக்குள் அதிகமான சொற்களைச் சரியாகச் சொல்லுமாறு இருவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதில் ஹரிணி 21 சொற்களையும் விக்ரம் 15 சொற்களையும் சரியாகக் கூறினர்.
அமெரிக்கத் துணை அதிபரும் இந்திய வம்சாவளியினருமான கமலா ஹாரிசை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார் ஹரிணி.
இடபிள்யூஸ்கிரிப்ஸ் மீடியா நிறுவனம் 1925ஆம் ஆண்டில் இருந்து இந்த எழுத்துக்கோவைப் போட்டியை நடத்தி வருகிறது.

