ஆஸ்திரேலியா, தாய்லாந்திலிருந்து குளிர்வசதியில் வைக்கப்பட்ட கோழியையும் அமெரிக்கா, பிரேசில் ஆகியவற்றிலிருந்து உறைந்த கோழியையும் சிங்கப்பூர் வரும் வாரங்களில் கூடுதலாக இறக்குமதி செய்ய உள்ளது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், சனிக்கிழமை (ஜூன் 4) அன்று இதைத் தெரிவித்தார்.
மலேசியா அறிவித்த கோழி ஏற்றுமதித் தடை கடந்த புதன்கிழமை நடப்புக்கு வந்தபோதும் சிங்கப்பூரில் கிடைக்கும் கோழிகளின் எண்ணிக்கை நிலைப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
கோழி உற்பத்தியும் விலைகளும் நிலைப்படும் வரை தடை நடப்பில் இருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் கூறி இருந்தனர்.
மலேசியா, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக 3.6 மில்லியன் கோழிகளை ஏற்றுமதி செய்கிறது.
சிங்கப்பூர் மாதாமாதம் 2 மில்லியன் கோழிகளை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இது சிங்கப்பூரில் தேவைப்படும் கோழிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட திரு டான், தாம் சனிக்கிழமை காலையில் சில பேரங்காடிகளைச் சென்று பார்த்ததாகவும் அங்கு கோழிகள் நிறைய வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

