பொருளியல் உறவை வலுப்படுத்த சிங்கப்பூர், ஜப்பான் இணக்கம்
தற்காப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, பொருளியல் உறவுகளை மேம்படுத்த சிங்கப்பூரும் ஜப்பானும் அணுக்கமாகப் பணியாற்றும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் தெரிவித்துள்ளனர்.
இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் நோபுவோ கிஷியும் தற்காப்புப் பரிமாற்றங்கள் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட குறிப்பாணை ஒன்றில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான தற்காப்புப் பரிமாற்றங்களை முறைப்படுத்த 2009ல் செய்யப்பட்டிருந்த உடன்பாடு ஒன்றைப் புதுப்பிக்கும் விதமாக இந்த இணக்கக் குறிப்பு அமைகிறது. இஸ்தானாவில் திரு கிஷிடாவை சந்தித்த பிறகு நடந்த கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் லீ, "தற்காப்புச் சாதனங்கள், தொழில்நுட்பத்தை மாற்றிவிடுவதற்கான உடன்பாடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்," என்றார்.
அத்தகைய சாதனங்கள், தொழில்நுட்பத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வகைசெய்யும் சட்டபூர்வமான கட்டமைப்பு ஒன்றை இந்த உடன்பாடு ஏற்படுத்தும். ஆசியான் நாடுகள் பலவும் ஜப்பானுடன் இதுபோன்ற ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
"தற்காப்புப் பரிமாற்றங்கள் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட இணக்கக் குறிப்பின் அடிப்படையில், மேலும் உறுதியான பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கி நகர நாங்கள் இணக்கம் கண்டோம்," என்று திரு கிஷிடா கூறினார்.
அதிகாரிகளின் வருகை, கொள்கை தொடர்பான கலந்துரையாடல்கள், ராணுவ அதிகாரி சந்திப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் ஒத்துழைப்பு, அமைதிக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆரம்பகட்ட இணக்கக் குறிப்பு உள்ளடக்குவதாக தற்காப்பு அமைச்சு கூறியது. தளவாடவியல் ஆதரவு, தற்காப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், வேதியியல், உயிரியல் கதிரியக்கவியல், வெடிமருந்து மிரட்டல்களுக்கு எதிரான பாதுகாப்பு, உத்திபூர்வத் தொடர்பு, கடல்துறைப் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய ஒத்துழைப்பு அம்சங்களை மேம்படுத்தப்பட்ட இணக்கக் குறிப்பு அடையாளம் காண்கிறது.
ஷங்ரிலா கலந்துரையாடலில் முக்கிய உரையாற்ற திரு கிஷிடா நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்தார். கடந்த ஆண்டு ஜப்பானியப் பிரதமராகப் பதவியேற்றபின் அவர் சிங்கப்பூர் வந்திருப்பது இதுவே முதன்முறை.

