பிரதமர் லீ: நம்பிக்கை, ஒத்துழைப்பை மேம்படுத்த உலகநாடுகள் முயலவேண்டும்

பிரதமர் லீ: நம்பிக்கை, ஒத்துழைப்பை மேம்படுத்த உலகநாடுகள் முயலவேண்டும்

1 mins read
71b4ab60-f93f-4a5c-a434-fe38ec788605
பிரதமர் லீ சியன் லூங்குடன் சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹெ. படம்: ஃபேஸ்புக்/லீ சியன் லூங் -
multi-img1 of 2

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நாடுகள் அவற்றின் தற்காப்பு உத்திகளை மறுஆய்வு செய்து வரும் வேளையில், அவை மேலும் நெருக்கமாகப் பணியாற்றவும் நம்பிக்கையை வளர்த்து ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்வதால், கூட்டாக சேர்ந்து நமது பாதுகாப்பை வலுப்படுத்தவும் விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய ஒழுங்குமுறையைக் கட்டிக்காக்கவும் முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவல், உக்ரேன் போர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாடு, பன்னாட்டு அரசியல் பதற்றநிலை அதிகரிப்பு போன்றவற்றால் இரண்டு ஆண்டுகளில் உலகம் மாறி இருப்பதைப் பிரதமர் சுட்டினார். திரு லீ ஞாயிற்றுக்கிழமை அன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப் பதிவிட்டார்.

கடந்த மூன்று நாள்களாக தாம் பல்வேறு தற்காப்பு அமைச்சர்களையும் ராணுவத் தளபதிகளையும் சந்தித்துப் பேசியதை அவர் தமது பதிவில் சுட்டினார்.

ஷங்ரிலா கலந்துரையடலுக்கு இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

கொவிட்-19 பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷங்ரிலா கலந்துரையாடல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் ஆகியோருடன் தாம் நடத்திய சந்திப்புகள், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் அந்த நாடுகளுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வலுவான உறவுகளை மறுஉறுதிப்படுத்தவும் நல்ல வாய்ப்பை அளித்ததாகப் பிரதமர் கூறினார். ஷங்ரிலா கலந்துரையாடலில் கலந்துகொள்ள 42 நாடுகளிலிருந்து 60க்கும் அதிகமான தற்காப்பு அமைச்சர்களும் ராணுவ உயர் அதிகாரிகளும் சிங்கப்பூர் வந்திருந்தனர்.