உக்ரேனில் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் வாழும் உக்ரேனியர்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளை முறைப்படி வழங்க மாஸ்கோ தொடங்கியது.
உக்ரேனின் தென் பகுதியில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கலவரங்கள் கூடி வருகின்றன. மருத்துவப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவை களை வழங்குவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
என்றாலும்கூட உக்ரேனின் தென்பகுதியில் மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தன் வசம் சேர்த்துக்கொள்ளும் ரஷ்யாவின் முயற்சிகளையொட்டியே கடவுச்சீட்டு நடவடிக்கை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதோடு மட்டுமின்றி, ரஷ்யாவின் நாணயத்தைச் சட்டபூர்வ நாணயமாக ஆக்கவும் உக்ரேனிய கைத்தொலைபேசி கட்டமைப்புகளைத் துண்டிக்கவும் ரஷ்யா முயற்சிகளை எடுத்து வருகிறது.
மாஸ்கோவின் இந்தச் செயல்கள் உக்ரேனின் இறையாண்மையை வெளிப்படை யாக மீறிய ஒரு செயல் என்று உக்ரேனிய அதிகாரிகள் கண்டித்தனர்.
கடவுச்சீட்டுக்கு மனுசெய்ய வேண்டாம் என்று ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசிக்கின்ற உக்ரேனியர்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இதனிடையே, உக்ரேனின் மேற்குப் பகுதியில் உள்ள சோர்ட்கிவ் என்ற நகரின் மீது நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அங்குள்ள ராணுவத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும் 22 பேர் காயமடைந்துவிட்டதாகவும் டெர்னோ பில் வட்டாரத்தின் ஆளுநர் இணையம் வழி தெரிவித்தார்.
டெர்னோபில் நகருக்கு 75 கி.மீ. தெற்கே உள்ள சோர்ட்கிவ் நகரில் நான்கு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக விலோடிமிர் டிரஷ் என்ற அந்த ஆளுநர் குறிப்பிட்டார்.
ராணுவத் தளம் ஒன்றும் குடிமக்கள் நிலைகளும் அழிந்தன. காயமடைந்த 12 வயது சிறுவன் உட்பட 22 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக திரு டிரஷ் கூறினார். நான்கு அடுக்குமாடி கட்டடங்களும் நாசமானதாக அவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், டெர்னோபில் பகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா ஆயுதங்கள் இருந்த பெரிய கிடங்கு ஒன்றை குருய்ஸ் ஏவுகணைகளைப் பாய்ச்சி ரஷ்ய படைகள் அழித்துவிட்டதாக ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு கூறியது என்று இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உக்ரேனின் போர் விமானங்களை கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படைகள் வீழ்த்திவிட்டதாகவும் அது கூறியது.

