சீனாவை அனைத்துத் தரப்பிலும் ஒடுக்கிவைக்க, கட்டுப்படுத்தி வைக்க அமெரிக்கா முயல்கிறது. இதை அமெரிக்கா நிறுத்தினால்தான் இருநாட்டு உறவு மேம்படும் என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்றுடன் முடிவடைந்த ஷங்ரிலா மாநாட்டில் பேசிய சீனாவின் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி, இந்த வட்டார ஒழுங்குக்கான தனது நாட்டின் இலக்கை விவரித்தார்.
"அனைத்துலக ஒழுங்குமுறையை அமைதியான முறையில் மேம்படுத்தி நிலைநாட்டி வரவே சீனா உறுதி பூண்டுள்ளது.
"ஆனால் தைவான் போன்ற நாட்டின் மூலாதார நலன்களுக்கு மிரட்டல் ஏற்பட்டால் கடைசிவரை சீனா இரண்டில் ஒன்று பார்த்துவிடும்," என்று அவர் எச்சரித்தார்.
அமெரிக்க-சீன உறவு மிகமுக்கியமான ஒரு கட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார். சீனாவை மிரட்டலாக அல்லது எதிரியாக பார்ப்பது வரலாற்றுப் பிழை, அரசதந்திர பிழையாகிவிடும்.
"சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அதேபோல், சீனாவின் உள் விவகாரங்களில் அது தலையிடக்கூடாது. சீனாவின் நலன்களைக் கெடுக்கும் வேலைகளில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என்றார் சீன அமைச்சர்.
இருநாட்டு உறவு மேம்பட வேண்டும் எனில் சீனாவுக்கு எதிரான செயல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று ஜெனரல் வெய் வலியுறுத்தினார்.
ஆசியாவின் ஆக உயரிய அந்த மாநாட்டில் சனிக்கிழமை பேசிய அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், சீனாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை சீன அமைச்சர் நிராகரித்தார்.
"கொரோனா தொற்று, உக்ரேன் போர் உள்ளிட்ட அனைத்துலக பிரச்சினைகளை உலகம் இப்போது எதிர்நோக்குகிறது.
"இத்தகைய ஒரு காலகட்டத்தில் எல்லாருமே ஒரே கதியில்தான் இருக்கிறோம். எல்லாரும் சேர்ந்து செயல்பட்டாலொழிய அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது," என்று சீன தற்காப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
"ஒருவரைச் சுற்றி பெரும் சுவரை அமைத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று இணையான பல ஒழுங்குமுறைகளை உருவாக்கினால் உலகம் இரண்டுபடும். அனைத்து நாடுகளின் பொதுவான நலன்கள் கீழறுக்கப்படும்.
"அமைதியான சகோதரத்துவ சகவாழ்வை நாம் மேம்படுத்த வேண்டும். எல்லாருக்கும் வெற்றியை ஏற்படுத்தித் தரும் ஒத்துழைப்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகார அரசியலை, மேலாதிக்கப் போக்கைக் கைவிட வேண்டும்.
"பலதரப்பு ஏற்பாடு என்ற போர்வையில், எந்தவொரு நாடும் தனது விருப்பங்களை மற்ற நாடுகளின் மேல் திணிக்கக் கூடாது. அல்லது மற்ற நாடுகளை மிரட்டக் கூடாது," என்று சீன தற்காப்பு அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சீரான, நிலையான உறவு உலக அமைதிக்கும் மேம்பாட்டிற்கும் உயிர்நாடியானது என்றாரவர்.
அந்த நல்லுறவு ஒவ்வொருவரின் நலன்களையும் உறுதிப்படுத்தும். அதேவேளையில், முறைப்புப் போக்கைக் கைக்கொண்டால் யாருக்குமே நன்மை கிடையாது என்று ஜெனரல் வெய் ஃபெங்கி வலியுறுத்திக் கூறினார்.
சீனாவை அமைதியான முறை யில் தலைதூக்கி வரும் ஒரு வல்லரசு என்று குறிப்பிடவே தான் விரும்புவதாக அவர் கூறினார்.
அதேவேளையில், சீனாவை கோபமூட்டுவோருக்கு கடும் எச்சரிக்கையையும் தமது உரையில் அவர் தெரிவித்தார். சீனா எந்த அளவுக்கு மேம்பட்டாலும் சரி அது ஒருபோதும் மேலாதிக்கத்தை நாடவே நாடாது என்று ஜெனரல் வெய் உறுதிபட கூறினார்.

