அமைச்சர்: அமைதி, ஒத்துழைப்பை வளர்த்து பேரிடரைத் தவிர்க்கவேண்டும்
உக்ரேனிய நிலவரத்தில் இருந்து ஆசியா சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று வலியுறுத்தினார்.
நம்முடைய வரலாற்றில் மிக ஆபத்தான காலகட்டம் இப்போது நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய ஒரு நேரத்தில் நாம் அமைதியையும் ஒத்துழைப்பையும் பொருளியல் சார்புத் தன்மையையும் தொடர்ந்து பேணி வளர்த்து பேரிடரைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடந்த மூன்று நாள் ஷங்ரிலா தற்காப்பு உச்சநிலை மாநாட்டின் கடைசி நாளான நேற்று முழு விவாதிப்புக் கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாட்டின் இறையாண்மையை, சட்டபூர்வ எல்லையை எந்தவொரு நாடும் மதித்து நடக்க வேண்டும் என்று அனைத்து ஆசிய நாடுகளும் தெரிவித்து இருப்பதைச் சுட்டினார்.
எல்லா நாடுகளும் சொல்வ தோடு நின்றுவிடாமல் செய்கையிலும் இதை உறுதிப்படுத்தி உக்ரேன் போன்ற நிலைமையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.
உலகளவில் ஒத்துழைப்பும் நல்ல எண்ணமும் மங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, பேரிடர்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான முதல் முயற்சியாக இருக்கும் என்றார்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆசியான், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை போன்ற ஏற்பாடுகளை ஆசியா வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஆசியான் தனக்குள்ளும் தனக்கு வெளியே உள்ள வட்டார சக்திகளோடும் ஈடுபாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று டாக்டர் இங் வலியுறுத்தினார்.
ஒருவர் மற்றொருவர் மீது நம்பிக்கையைப் படுத்துவது மூலாதாரமான ஒன்று என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.
எல்லாரையும் உள்ளடக்குவது, பலதரப்பு ஏற்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஷங்ரிலா மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள், மூத்த தற்காப்பு அதிகாரிகளிடம் உரையாற்றிய டாக்டர் இங், "இந்த மாநாடு உங்களின் தீர்மானங்களை உறுதிப்படுத்தி இருக்கும்.
"உலகையும் நாடுகளையும் தொடர்ந்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உங்களுக்கு இந்த மாநாடு புதிய தெம்பைக் கொடுத்து இருக்கும்.
"இது சாதிக்கப்பட்டு இருந்தால் நாம் அனைவருக்குமே நன்மை," என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, மாநாட்டு முடிவில் பேட்டியளித்த அமைச்சர் டாக்டர் இங், ஷங்ரிலா மாநாட்டில் அமெரிக்கா, சீனா தற்காப்பு அமைச்சர்கள் விடுத்த அறிக்கைகளைப் பார்க்கையில், ஆசியான் நாடுகள் எந்தவொரு பக்கமும் சேர்ந்துகொள்ளும்படி நெருக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு முடிவில் நடக்கவிருக்கும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம் பிளஸ்) என்ற ஏற்பாட்டிற்கு உட்பட்டு ஆசியான் நாடுகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அந்தச் சந்திப்பில் சீனாவும் அமெரிக்காவும் மீண்டும் கலந்துகொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் இங் ஷங்ரிலா மாநாட்டு முடிவில் 30 நிமிடம் பேட்டி அளித்தார்.
மாநாட்டிற்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை. ஏடிஎம்எம் பிளஸ் ஏற்பாட்டில் மேலும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்க்கும் விதத்தில் அதை விரிவுபடுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அந்த ஏற்பாட்டை விரிவுபடுத்த கொள்கை அளவில் ஆசியான் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று குறிப்பிட்ட டாக்டர் இங், இருந்தாலும் இதன்தொடர்பில் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது என்றார்.
ரஷ்யா மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருக்க வேண்டுமா என்பது பற்றி கருத்து கூறிய டாக்டர் இங், "உக்ரேன் படையெடுப்பைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் ரஷ்யா அழைக்கப்படாதது ஏன் என்பது புரிந்துகொள்ள கூடியதே. மாநாட்டில் ரஷ்யா கலந்துகொண்டால் மற்ற சிலர் வெளிநடப்பு செய்திருக்கக்கூடும் என்பது போன்ற நடைமுறை பிரச்சினைகளும் இதில் உள்ளன," என்றார்.
உலகப் பிரமுகர்கள் நேரடியாகச் சந்தித்து பேசவேண்டும் என்று மிகவும் விருப்பத்துடன் இருந்தார்கள். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்த இந்த ஆண்டு ஷங்ரிலா மாநாடு மதிப்புமிக்கது என்றும் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் கூறினார்.

