இந்தியாவில் பல்வேறு அரசுத் துறைகளிலும் அமைச்சுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் அடுத்த 18 மாதங்களுக்குள் பத்து லட்சம் (1 மில்லியன்) பேரை நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாஜக ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகள் ஆனபோதிலும் நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருதரப்பிலும் தொடர்ந்து இவ்வாறு கூறப்படுவதைக் கவனித்த பிரதமர் மோடி, அரசுத் துறை
களிலும் அமைச்சுகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
மனிதவள அமைச்சு இதற்கான ஆய்வை நடத்தியது.
ஆய்வின் முடிவுகளைப் பரி
சீலித்த திரு மோடி, இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் பணியிடங்களை நிரப்புதற்கான வேலைகளில் உடனே ஈடுபடுமாறு உத்தரவிட்டார்.
பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டரில் இதனைத் தெரிவித்தது. இதனால், இப்போது முதல் ஒன்றரை ஆண்டுகளில் அவசரமாகப் பணியிடங்களை நிரப்ப இந்திய அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒன்றரை ஆண்டுகாலக் கெடு முடிந்ததும் அடுத்த நான்கைந்து மாதங்களில் தற்போதைய மோடி அரசின் பதவிக்காலம் நிறைவுபெறும். அதன் பின்னர், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும்.
இந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவேண்டும் என்ற நினைப்புடன் பல்வேறு முயற்சிகளை மோடி அரசாங்கம் முடுக்கிவிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்றைய அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது வேலைவாய்ப்பின்மை பேசுபொருளாகிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த 'மெகா' வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவையில் பேசும்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறினார்.
இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதில் திரு மோடி கவனம் செலுத்தி வருவதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கூறுகிறது. சில மாதங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் அது தெரிவித்தது.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா கூறுகையில், "காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலை அனுப்புமாறு அரசுத் துறைகளும் அமைச்சுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டன. அந்தப் பட்டியலில் உள்ளதற்கு இணங்க காலி இடங்களை நிரப்புமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் ஆய்வு நடத்தி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்," என்று குறிப்பிட்டது.
இந்நிலையில், பாஜக நாடாளு மன்ற உறுப்பினரான வருண் காந்தி, தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஒரு கோடிக்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதனை நிரப்புவதற்கு ஏற்ற வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

