சிங்கப்பூருக்கும் பிரட்டனுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மின்னிலக்க வர்த்தக உடன்பாடு நேற்று முதல் நடப்புக்கு வந்தது.
தரவுப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய தரவுப் பதிவுகளுக்கான தரநிலை மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை வகுக்க இந்த 'பிரிட்டன்-சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு' (UKSDEA) வழிவகுக்கிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில் இந்த உடன்பாட்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டபோதிலும் தேவைப்படும் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தற்போதுதான் நிறைவுபெற்றுள்ளன.
லண்டன் மாநகரில் 'லண்டன் டெக் வீக்' எனப்படும் தொழிநுட்ப மாநாட்டில் பங்கேற்ற சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இந்த உடன்பாடு நடப்புக்கு வருவதாக அறிவித்தார். இந்த மாநாடு நாளை மறுதினம் (ஜூன் 17) வரை நடக்கிறது.
மாநாட்டில் நேரடியாகவும் மெய்நிகர் வாயிலாகவும் பங்கேற்ற தொழில்நுட்பத் தலைவர்கள், தொழில் தொடங்குநர் ஆகியோர் மத்தியில் திரு ஹெங் உரையாற்றினார்.
"இந்த மின்னிலக்க யுகத்தில், புதிய மின்னிலக்க இணைப்புகளை ஏற்படுத்த நமது பாரம்பரிய பொருளியல் தொடர்புகளுக்கும் அப்பால் நாம் செல்ல வேண்டி உள்ளது," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஏற்கெனவே ஆஸ்திரேலியா, சிலி, நியூசிலாந்து மற்றும் தென்கொரியா ஆகியவற்றுடன் இதேபோன்ற உடன்பாட்டை செய்துள்ளது.
இருப்பினும் பிரிட்டனுடனான மின்னிலக்க வர்த்தக உடன்பாட்டை சிங்கப்பூர் ஏற்படுத்தியுள்ளது இதுவே முதல்முறை. மேலும், ஆசிய நாடு ஒன்று, ஓர் ஐரோப்பிய நாட்டுடன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருப்பதும் இது முதல்முறை ஆகும்.
"புதிய உடன்பாடு நடப்புக்கு வருவதன் மூலம் மின்னிலக்கப் பொருளியலில் சிங்கப்பூர் வர்த்தகத்துக்கான புதிய வளர்ச்சி வாய்ப்புகள் உருவாக்கித் தருவதில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் கடப்பாடு வெளிப்படும்," என்று சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியன கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளன.
"பாதுகாப்பான மின்னிலக்கத் தொகையளித்தல், காகித ஆவணமற்ற வர்த்தகம், மின்னிலக்கப் பொருளியல் பங்கேற்றத்தை ஊக்கு விக்கும் தடையற்ற, நம்பத்தகுந்த தரவுப் பதிவேற்றங்கள் போன்ற போன்ற இருதரப்பு மின்னிலக்க வர்த்தகப் பலன்களை இந்த உடன்பாட்டின் மூலம் பெறலாம்.
"நாடுவிட்டு நாடு பணம் அனுப்பு வதில் பயனீட்டாளர்களுக்கும் பெரிய அளவிலான இணையப் பாதுகாப்பு கிடைக்கும்," என்றும் அறிக்கை கூறியது.
பாதுகாப்பான எல்லை தாண்டிய மின்னிலக்கத் தொகையளித்தலுக்கும் மின்னிலக்க வடிவிலான வர்த்தக ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஒளிவுமறைவற்ற விதிகளை ஏற்படுத்தலாம் என்பதும் உடன்பாட்டின் ஓர் அம்சம்.
இவ்வாறு செய்யப்படுவதால் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை ஆற்றல்மிகுந்த வகையில் வேகமாகவும் குறைந்த செலவிலும் கையாளமுடியும்.
வேலையளித்தல், அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைப்பை ஏற்படுத்தித் தருதல், புத்தாக்க முயற்சிகள் போன்றவற்றில் இங்குள்ள சிறிய வர்த்தகங்களுக்கும் இரு நாடுகளும் உடன்பாட்டின் மூலம் உதவமுடியும்.
அரசாங்கத் தகவல்களை அந்நிறுவனங்கள் எளிதாக அணுக இடமளிப்பதன்வழி இது சாத்தியமாகும்.
மோசடி, தவறாக வழிநடத்துதல், இணையம்வழி ஏமாற்றுதல் போன்றவற்றில் பயனீட்டாளர்கள் சிக்கிவிடாதவாறு பயனீட்டாளர்
களைப் பாதுகாப்பதற்கான சட்ட, விதிமுறைகளை இந்த உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தலாம்.

