ஜூலை முதல் விரிவடையும்; மேலும் 1,400 புளோக்குகளை உள்ளடக்கும்
சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சலுக்கு எதிரான போரில் கொசு மூலம் கொசுவை அழிக்கும் 'வோல் பாகியா' என்ற செயல்திட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தச் செயல்திட்டம் மேலும் 1,400 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளை உள்ளடக்கும் வகையில் ஜூலை முதல் நீட்டிக்கப்படும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப் புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று இதனை அறிவித்தார்.
வோல்பாகியா செயல்திட்டம் இப்போது 1,800 புளோக்குகளில்-அதாவது 160,000 வீடுகளை உள்ளடக்கி செயல்படுத்தப்படுகிறது. திட்டம் நீட்டிக்கப்படும்போது 300,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளடக்கப்படும்.
சிங்கப்பூரில் உள்ள வீவக புளாக்குகளில் கிட்டத்தட்ட 31% புளோக்குகளில் (சுமார் 3ல்1) இந்தக் கொசு ஒழிப்புத் திட்டம் நடப்பில் இருக்கும். டெங்கி தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கவலை நிலவும் ஒரு நேரத்தில் செயல்திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.
டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை விரைவில் 2,000ஐத் தாண்டக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் ஜூன் 14ஆம் தேதி வரை டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,000க்கும் அதிகம்.
டெங்கி காய்ச்சல் பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை தலைவிரித்தாடும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது ஆசிய டெங்கி உச்சநிலை மாநாட்டில் பேசிய அமைச்சர், வீடுகளிலும் கட்டடங்களிலும் தண்ணீர் தேங்கி இருப்பதைத் தவிர்த்துக்கொண்டு அதன்மூலம் கொசு இனப்பெருக்கம் இடம்பெறாமல் தனிப்பட்டவர் களும் கட்டட உரிமையாளர்களும் முழு விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்றார்.
இதன்மூலம் அவர்கள் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நேற்றுடன் முடிவடைந்த அந்த மூன்று நாள் உச்சநிலை மாநாட்டை முதன்முதலாக இந்த ஆண்டு சிங்கப்பூர் ஏற்று நடத்தியது.
'ஆசியா டெங்கி அபாயசங்கு, செயற்குழு' என்ற அமைப்பு அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.
அதில் ஆசியாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருந்தகத் துறையினர், ஆய்வாளர்கள், அரசாங்க சுகாதாரத் துறையினர், கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த வட்டாரத்தில் டெங்கிக் காய்ச்சலை எப்படி ஒடுக்கலாம் என்பதன் தொடர்பான உத்திகளை விவாதித்தனர்.
வோல்பாகியா திட்டம் இப்போது மொத்தம் ஐந்து இடங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த எண்ணிக்கை 13 ஆகும்.
பெரிய அளவில் பல இடங் களில் திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி அதிகாரிகள் புரிந்துகொள்ள இந்தத் திட்ட விரிவாக்கம் உதவும் என்றார் அமைச்சர்.
திட்ட விரிவாக்கத்திற்கு ஆதரவாக வாரம் ஒன்றுக்கு உருவாக்கப்படும் வோல்பாகியா கொசுக்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு முடிவில் 2 மில்லியனில் இருந்து 5 மில்லியனாக தேசிய சுற்றுப்புற வாரியம் அதிகப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

