நகர விளிம்பில் இடம்பெறும் 'பிக்கடில்லி கிராண்ட்', 'லிவ்@எம்பி' என்ற இரண்டு பெரிய தனியார் திட்ட வீடுகள் மே மாதம் விற்பனைக்கு வந்தன.
இவற்றின் காரணமாக அந்த மாதம் புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஆறுமாத காலத்தில் இல்லாத அளவை எட்டியது.
கடந்த மே மாதம் 1,356 வீடுகள் கைமாறின. அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் 51.5% வீடுகள் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன.
நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரிய வருகின்றன.
ஆனாலும் இந்த ஆண்டு இதுவரை நடந்த மொத்த விற்பனை, சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 32% குறைந்து 3,841 வீடுகளாக இருந்தன. இவற்றில் எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் உள்ளடங்க வில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய கூட்டுரிமை வீடுகளையும் சேர்த்துப் பார்த்தால் இந்த ஆண்டு மே மாதம் புதிய வீடுகளின் விற்பனை 62.6% கூடியது. மொத்தம் 1,376 வீடுகள் கைமாறின. இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 846 ஆக இருந்தது.
வீடு கட்டி விற்பவர்கள் சென்ற மாதம் மூன்று மடங்கு அதிக வீடுகளை அதாவது, 1,240 வீடுகளை விற்பனைக்கு விட்டார்கள். இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் வெறும் 397 வீடுகளாக இருந்தன.
ஓராண்டுக்கு முந்திய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதம் விற்பனைக்கு விடப்பட்ட புதிய வீடுகளின் அளவு 140% அதிகமாக இருந்தது.
எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைச் சேர்த்துப் பார்க்கையில் ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் அதிகமாக 22% வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
மே மாதம் புதிய வீடுகள் விற்பனையைப் பார்க்கையில் அது கிட்டத்தட்ட 2021 நவம்பர் மாத நிலைக்கு திரும்பிவிட்டதாகத் தெரிகிறது என்று 'ஜேஎல்எல்' நிறுவனத்தின் ஆய்வு ஆலோசனைத் துறை மூத்த இயக்குநர் ஓங் டெக் ஹுய் கூறினார்.
சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வட்டிவிகிதம் உயர்வு, பரந்த அளவில் பொருளியல் நிச்சயமில்லாமல் இருந்தது இவை எல்லாம் சந்தையில் பிரதிபலித்தன.
இத்தகைய சூழ்நிலையில் வீடு வாங்குவோரிடம் நிலவும் விருப்பத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்குத் தோதாக மே மாதம் தொடங்கப்பட்ட புதிய திட்ட வீடுகள் இடம்பெற்றன என்று அவர் குறிப்பிட்டார்.
மே மாதம் தனியார் வீடுகள் விற்பனை வலுவாக இருந்ததால் வீடு கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைத்து இருக்கும். அதனால் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்கப்படக் கூடும் என்று திரு ஓங் தெரிவித்தார்.
பிக்கடில்லி கிராண்ட், லிவ்@எம்பி ஆகிய திட்ட வீடுகள் முறையே சதுர அடி $2,175 மற்றும் $2,405 என்ற நடுத்தர விலையில் அதிகம் வாங்கப்பட்டன. இது மிகவும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்று 'பிராப்நெக்ஸ் ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் ஆய்வுத் துறை தலைவர் திருவாட்டி வோங் சியூ யிங் தெரிவித்தார்.
போதிய அளவில் வீடுகள் விற்பனைக்கு வராததும் புறநகர் பகுதிகளில் புதிய வீடுகள் விடப்படாத காரணத்தினாலும் சிலர் நகர விளிம்புப் பகுதி வீடுகளை விரும்பி இருப்பார்கள்.
இதனால் அந்த இரண்டு வீட்டுத் திட்டங்களிலும் விற்பனை அதிகரித்தது என்றார் அவர்.

