பல்லாயிரம் வெள்ளி மதிப்பிலான வரதட்சணையைப் பெற்று, இரு பெண்களை மணந்தபின் அவர்களை மணமுறிவு செய்துவிட்டதாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர்மீது தமிழகக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திரு முகம்மது ரஃபீக் அப்துல் காதர், 39, என்ற அந்தக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி), 2014ல் தஸ்லிமா என்ற இந்தியப் பெண்ணை மணந்ததாகவும் அப்போது பல ஆயிரம் மதிப்பிலான நகைகளும் ரொக்கமும் வரதட்சணையாகத் தரப்பட்டதாகவும் புதிய தலைமுறை செய்தி தெரிவித்தது.
அதன்பின் சிங்கப்பூருக்கு அழைத்து வந்த சில நாள்களிலேயே தஸ்லிமாவை திரு ரஃபீக் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் வரதட்சணையைத் திருப்பித் தராமல் மணமுறிவு கோரி விண்ணப்பித்ததாகவும் அச்செய்தி கூறியது.
இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள திரு ரஃபீக், தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் தம்மிடம் இருந்து பணம் பறிக்கவும் அவர்கள் முயல்வதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
சிங்கப்பூரில் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும் 2017ல் மணமுறிவு பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தமிழக ஊடகச் செய்திகள் தவறானவை. மணமுறிவு பெற்றபின் வரதட்சணையை எடுத்துக்கொண்டு தஸ்லிமா ஊர் திரும்பிவிட்டார். அதன்பின் அவருக்குத் திருமணமாகி, குழந்தையும் இருக்கிறது," என்றார் திரு ரஃபீக்.
பின்னர் 2020ல் அமீர் நிஷா என்ற இந்தியப் பெண்ணை மணந்த திரு ரஃபீக், குறுகிய காலத்திலேயே அவரிடமிருந்தும் மணமுறிவு கோரி விண்ணப்பித்தார் என்றும் அப்போதும் அவர் வரதட்சணையைத் திருப்பித் தரவில்லை என்றும் அச்செய்தி கூறியது.
இக்குற்றச்சாட்டையும் மறுத்த திரு ரஃபீக், இவ்வாண்டில்தான் மணமுறிவு குறித்து இறுதிசெய்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக இம்மாதம் 5ஆம் தேதி திரு ரஃபீக் திருவாரூர் சென்றார். இதனை அறிந்த அவரது முன்னாள் மனைவியரின் குடும்பத்தினர், அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஏமாற்றும் நோக்கில் இந்தியா வந்துள்ளதாகக் கூறினர்.
கிட்டத்தட்ட 100 பேர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து, முன்னாள் மனைவியர் இருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் (S$178,000) இழப்பீடு தர வேண்டும் என்றும் பணம் தராவிடில் தம்மைக் கொன்று, கடலில் வீசிவிடுவதாக மிரட்டினர் என்றும் திரு ரஃபீக் சொன்னார்.
இதனையடுத்து, அவர் அவசர அவசரமாக சிங்கப்பூர் திரும்பினார்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடந்துவருவதாக சிங்கப்பூர் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

