சென்னை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள்

சென்னை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள்

1 mins read

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிந்துவரும் பயணிகள் மட்டுமே விமான நிலையத்தினுள் அனுமதிக்கப் படுகின்றனர். முகக்கவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் எல்லாப் பகுதிகளிலும் 'நோ மாஸ்க், நோ என்ட்ரி' என்ற ஒட்டுவில்லை ஒட்டப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

கொரோனா முதல் அலையின்போது பயணிகள் தவறான கைப்பேசி எண்களைக் கொடுத்துச் சென்றதால், பரிசோதனை முடிவுகளில் தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டும் அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவ்வாறு ஏறக்குறைய 15,000 பேர் தவறான தகவல்களைக் கொடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால், வெளிநாடுகளில் இருந்து வருவோரில் சந்தேகத்திற்குரிய பயணிகளின் கடப்பிதழ் மற்றும் ஆதார் அட்டையைப் பார்த்து, அவர்களின் முகவரி, தொடர்பு எண்களைச் சுகாதாரத் துறையினர் குறித்துக்கொள்கின்றனர்.