இந்தியாவில் வெறும் நான்காண்டு காலத்திற்கு மட்டும் ராணுவத்தில் ஊழியர்களைச் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிப்பாதை' திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பல மாநிலங்களுக்கும் மூன்றாவது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் பரவியதாகத் தகவல்கள் தெரிவித்தன.
பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, உத்ரகாண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய பல மாநிலங்களுக்கும் ஆர்ப்பாட்டம் பரவிவிட்டதாகவும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்துவிட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டன.
நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 35 ரயில் சேவைகள் ரத்தாயின. தெலுங்கானாவில் வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் எட்டுப் பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பீகாரின் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்கப்பட்டது. பல ரயில்களும் எரித்து நாசமாக்கப்பட்டன. பீகாரில் பாஜக அலுவலகம் தகர்க்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.
உத்தரப் பிரதேசத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சும் நடந்தது.
தமிழ்நாட்டின் வேலூரில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு 'அக்னிப்பாதை' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகள் வெடிக்கும் வேளையில், ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிஅரசு கடந்த செவ்வாய்க்கிழமை அக்னிப்பாதை ஆட்சேர்ப்பு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 17.5 வயது முதல் 21 வரை வயதுள்ள இளைஞர்கள் நான்காண்டு காலத்திற்கு ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதற்குப் பிறகு ஓய்வூதியம் இன்றி அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என அரசு அறிவித்தது.
அந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 46,000 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவோரில் கால்வாசிப்பேர் மட்டும் 15 ஆண்டுகாலம் ராணுவத்தில் வேலை பார்க்கத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அத்திட்டத்தில் வேலையில் சேர்வோர் கீழ்நிலை பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
அக்னிப்பாதை திட்டத்திற்கு இளையர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தங்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்புகள் வேண்டும் என்று அவர்கள் குரல்கொடுக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த வயது வரம்பை 23க்கு மத்திய அரசு உயர்த்தியது. ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
ஏற்கெனவே ராணுவத்தில் சேர ஆயத்தமான இளைஞர்களும் அக்னிப்பாதை திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கூட அக்னிப்பாதையை எதிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியின் பாஜகவைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அக்னிப்பாதைத் திட்டம் நாட்டில் மேலும் வேலையின்மையை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்து இருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
இந்திய ராணுவத்தில் 1.3 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். இந்திய ராணுவத்தில் கீழ்நிலை பதவி வகிப்பவர்கள் பொதுவாக 17 ஆண்டுகாலம் சேவையாற்றுவார்கள். பிறகு ஓய்வு பெறுவார்கள்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறு வோருக்கு மாதாமாதம் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியச் செலவைக் குறைக்க வேண்டும் என்று அண்மையில் மத்திய அரசு முடிவு எடுத்தது.
அதனையடுத்து அக்னிப்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது.

