'செர்ஸ்' எனப்படும் ஒட்டுமொத்த மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மாற்று வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்பு விதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அத்தகைய வீட்டை வாங்குவோர் இனிமேல் வீட்டின் சாவியைப் பெற்றுக்கொண்ட தேதி முதல் ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகே தங்கள் வீடுகளை விற்க முடியும். இந்தப் புதிய விதி அங் மோ கியோ செர்ஸ் திட்ட வீடுகளில் இருந்து தொடங்குகிறது.
இதற்கு முன் தங்கள் வீட்டை தேர்ந்தெடுத்துக் கொண்ட தேதி முதல் ஏழு ஆண்டு காலத்தில் அல்லது சாவியைப் பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளில் அவர்கள் தங்கள் வீடுகளை விற்க முடியும்.
அதாவது சில உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் ஐந்தாண்டு காலம் வசிக்காத நிலையில்கூட வீட்டை விற்க முடிந்தது.
ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட செர்ஸ் திட்ட இடங்களில் புதிய விதிமுறை முதலில் நடப்புக்கு வரும் என்று வீவகவின் இணையத் தளம் தெரிவிக்கிறது.
அங் மோ கியோவில் உள்ள நான்கு வீவக புளோக்குகள் செர்ஸ் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக ஏப்ரல் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
செர்ஸ் திட்ட வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்பு கால விதி மாறுவதால் செர்ஸ் மாற்றுத் திட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கும் வீவகவிடம் இருந்து, மறுவிற்பனைச் சந்தையில் இருந்து வீட்டை வாங்கும் உரிமையாளர்களும் அதே ஐந்தாண்டு குறைந்த பட்ச குடியிருப்புக் கால விதி பொருந்தும்.
குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் என்பது, வீட்டை வாங்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தன் வீட்டில் வசிக்க வேண்டிய காலஅளவாகும். அதற்குப் பிறகுதான் அவர் தன் வீட்டை பகிரங்க சந்தையில் விற்கலாம்.
ரெட்ஹில் குளோஸ் செர்ஸ் திட்டம் 2011ல் இடம்பெற்றது. அந்தத் திட்டத்தின் கீழ் ஹெண்டர்சன் ரோட்டில் புளோக் 96ஏ-யில் உள்ள ஐந்தறை மாற்று வீடு சென்ற மாதம் இதுவரை இல்லாத சாதனை அளவாக $1.4 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டது.
அந்த வீட்டின் 99 ஆண்டு கால குத்தகையில் 96 ஆண்டுகள் ஒரு மாதம் எஞ்சி இருந்தன.
இதனையடுத்து செர்ஸ் திட்ட வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்புக் கால விதியில் மாற்றம் இடம்பெறுகிறது.
செர்ஸ் திட்டம் 1995ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய குடியிருப்புப் பேட்டையைப் புதுப்பிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தத் திட்டம் இடம்பெறுகிறது.
செர்ஸ் திட்டத்தின்படி, வீடுகள் இடித்து புதிதாக கட்டப்படும். குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் வீட்டுக்கு அருகேயே புதிய வீடுகள் கொடுக்கப்படும். செர்ஸ் திட்ட மாற்று வீடுகள் 99 ஆண்டு குத்தகைக் காலத்துடன் கூடியவை.

