இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரங் களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
எழுபது ஆண்டுகால வரலாற்றில் இல்லாத பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் அந்நாட்டில் எரிபொருள் அறவே இல்லை. இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியும் தீர்ந்து விட்டதால் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமும் கொவிட்-19 கொள்ளை நோய் ஏற்படுத்திய பாதிப்பும் இலங்கையின் 22 மில்லியன் மக்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது.
எரிபொருள் விநியோகிப்பில் உள்ள வரம்புகள், பலவீனமான போக்குவரத்து அமைப்பு, தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு திங்கள்கிழமையில்ருந்து குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வர அனுமதிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகமும், உள்துறை அமைச்சும் கூறியது.
ஏறக்குறைய ஒரு மில்லியன் அரசாங்க ஊழியர்களில் பொதுச் சுகாதார பராமரிப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்கள் மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று சுற்றறிக்கை தெரிவித்தது.
இவ்வாரத்தின் முற்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பொதுத்துறை ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் என்ற வேலை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எரிபொருளை வாங்க பத்து மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
முன்னதாக, திங்கள்கிழமையிலிருந்து பள்ளிகள் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. மின்சார வசதி இருந்தால் இணையம் வழி கற்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
இலங்கையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பட்டினியால் வாடுவதாக ஐநா எச்சரித்ததைத் தொடர்ந்து பள்ளிகளை மூட அரசு முடிவு செய்தது.
ஐவரில் நான்கு பேர், போதுமான உணவு இல்லாததால் ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிடுவதாகவும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உதவி தேவைப்படுவதால் மனிதாபி மான நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஐநா கூறியுள்ளது.
ஐநாவின் உலக உணவு திட்டத்தின் மூலம் கொழும்பில் உள்ள 2,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இம்மாதத்திலிருந்து டிசம்பர் வரையில் உணவளிக்கும் திட்டத்துக்காக அறுபது மில்லியன் டாலர் (83.4 மில்லியன் வெள்ளி) திரட்டப்படும் என்று உலக உணவு திட்டம் கூறி உள்ளது. இதற்கிடையே நாட்டை பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக திங்கள் அன்று அனைத்துலக பண நிதி யத்தின் பேராளர்களை இலங்கை அரசு சந்திக்கிறது.

