அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனி சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இதன் தொடர்பில் இருவரும் தனித்தனியாக தங்களுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையே தேவையே இல்லை என்று பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருவர் மட்டுமே கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தச் சமயத்தில் அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு தீர்மானக் கூட்டத்துக்கு வந்த ஓ. பன்னீர் செல்வம், அங்கு சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோரைச் சந்தித்தார்.
இந்தச் சூழ்நிலையில் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் பகுதி செயலாளரான அவர் ரத்தக்கறையுடன் உடனடியாக தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஜெயக்குமார் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரியவில்லை. வெளிநபர் என்று சில தொண்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் சமரச முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தம்பிதுரை சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தினார். அது வெற்றி பெறாத சூழ்நிலையில் செல்லூர் ராஜூ இரு தரப்பினரிடமும் பேசி வருகிறார்.
இதற்கிடையே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சுவரொட்டி போட்டி தொடங்கியுள்ளது.
சேலத்தில் இருந்து திருவண்ணா மலைக்கு வந்த எடப்பாடி பழனி சாமிக்கு, 'ஒற்றைத் தலைமையே', 'ஒற்றைத் தலைமை நாயகரே', 'பொதுச்செயலாளரே' என அவரது ஆதரவாளர்கள் வழியெங்கும் சுவ வொட்டி ஒட்டியிருந்தனர்.
இதற்குப் போட்டியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதே திரு வண்ணாமலையில் 'ஒற்றைத் தலைமையை ஏற்க வாருங்கள்' என்று குறிப்பிட்டு பன்னீர்செல்வம் படத்துடன் சுவரொட்டிகளை வெளி யிட்டு இருந்தனர்.

