கொவிட்-19 தொற்று, வாழ்க்கைப் பாணியைத் திருத்தி அமைத்துக் கொண்டு வேலைக்கும் குடும்ப உறவுக்கும் இடையிலான சமநிலையைச் சீர்செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது போன்ற புதிய ஏற்பாடுகள் காரணமாக குடும்பத்தினர் ஒருவர் மற்றொருவருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
செந்தோசாவில் பலவான் கிரீன் இடத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் சான் பேசினார்.
தந்தையர் தினத்தை நினைவுகூரும் வகையில் தந்தையர்களைப் போற்றிப் புகழும் கொண்டாட்டங்கள் கடந்த இரண்டு வார காலமாக நடந்து வருகின்றன. அந்தக் கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்ச்சியாக நேற்றைய கொண்டாட்டம் அமைந்தது.
பல அமைப்புகள் சேர்ந்து ஏற்பாடு செய்த நேற்றைய நிகழ்ச்சி, 'தந்தையர் சாதிக்கிறார்கள்' என்ற கருப்பொருளுடன் நடந்தது. தந்தையர்களையும் அவர்களின் முயற்சிகளையும் அங்கீகரித்துச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறு கின்றன.
"கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டாண்டு காலம் நமக்கு மிகச் சிரமமான காலகட்டமாக ஆகிவிட்டது.
"இன்னமும் பல நிலவரங்கள் நிச்சயமில்லாமல் இருக்கின்றன. இருந்தாலும்கூட கடந்த இரண்டு ஆண்டு காலம் இதர சில வழிகளில் நமக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்," என்றாரவர்.
அந்தக் காலகட்டத்தில் நம் முன்னுரிமைகளில் ஒருமித்த கவனத்தைத் திருத்தி அமைத்து மறுசிந்தனைக்கு அவற்றை உட்படுத்த முடிந்தது என்று அவர் கூறினார்.
ஆகையால், எந்தவொரு நெருக் கடியையும் வீணடிக்கக்கூடாது என்று கூறிய அமைச்சர், வாழ்க்கைப் பாணியைத் திருத்தி அமைத்துக்கொண்டு, சொந்த குடும்ப உறவைச் சீரமைக்க கிடைக்கக் கூடிய வாய்ப்புகளில் அது ஒன்று என்பதே தன் கருத்து என்றார்.
நேற்றைய நிகழ்ச்சியில் அமைச்சர் சானும் பல குடும்பத்தின ரும் செந்தோசாவில் தொங்குபாலம் ஒன்றில் ரிப்பன்களைப் பறக்கவிட்டு குடும்பத்திற்கான தங்களின் கடப் பாட்டை மறுஉறுதிப்படுத்தினார் கள்.

