ஜோகூர் பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையில் கேடிஎம் ரயில் சேவை நேற்று தொடங்கியது. கொவிட்-19 காரணமாக அந்தச் சேவை 2020 மார்ச் 24ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருந்தது.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று இதனை அறிவித்தார். அன்றாடம் 31 சேவைகள் நடக்கும். அவற்றில் 18 சேவைகள் ஜோகூர் பாரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து உட்லண்ட்சுக்கும் எஞ்சிய 13 சேவைகள் உட்லண்ட்சில் இருந்து ஜோகூர் பாருவுக்கும் செல்லும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கேடிஎம் சேவை மூலம் அன்றாடம் கிட்டத்தட்ட 7,000 பயணிகள் சென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இருந்தாலும் முதல் வாரத்தில் ஒவ்வொரு ரயிலிலும் 240 பேர்தான் போகலாம். அடுத்த வாரத்தில் ரயில்கள் முழுமையாக அதாவது 320 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய அமைச்சர், நேற்று ஜோகூர் பாரு சென்ட்ரலில் கேடிஎம் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் புறப்படும். ஜோகூரில் இருந்து உட்லண்ட்ஸ் செல்ல ஒருவருக்குக் கட்டணம் 5 ரிங்கிட் (S$1.60). உட்லண்ட்சில் இருந்து செல்ல கட்டணம் $5.
இதனிடையே, கேடிஎம் ரயில் சேவை தொடங்கியது பற்றி கருத்து தெரிவித்த ஜோகூர் முதல்வர் ஓன் ஹனிஃப் காஸி, கடற்பாலத்தில் கூட்டம் குறையும் என்றார்.
"இந்த ரயிலில் முதல் மாதத்தில் பயணம் செய்ய 70,000க்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சேவையை மக்கள் அதிகம் நாடுகிறார்கள் என்பதையே இது காட்டு கிறது. இச்சேவை தொடக்கம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி," என்றாரவர்.
பயணிகள் கேடிஎம் சேவை தொடங்கி இருப்பதை வரவேற்றனர். பேருந்தைவிட ரயில் பயணம் வசதியாகவும் வேகமாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

