அரசாங்க ஊழியர்களுக்குக் கிடைக்கும்
அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் 0.35 மாத அரையாண்டு போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதல் தொகையாக $200 முதல் $400 வழங்கப்படும்.
பொதுத் துறை தொழிற்சங்கங்களுடன் நடத்திய அணுக்கமான ஆலோசனைக்குப் பின்னர் போனஸ் தொகை முடிவுசெய்யப்பட்டது என்றும் அப்பிரிவு கூறியது.
"அனைத்து அரசாங்க ஊழியர்களின் கடின உழைப்பையும் பங்களிப்பையும் அரசாங்கம் மிகவும் மெச்சுகிறது," என்று அப்பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
MX13(I), MX14 ஆகியவற்றுக்கு நிகரான தரநிலைகளில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $200 கிடைக்கும். MX15, MX16 ஆகியவற்றுக்கு நிகரான தரநிலைகளில் இருப்போரும் செயற்பாட்டு ஆதரவுத் திட்ட (ஓஎஸ்எஸ்) தரநிலை 3 முதல் 5ல் இருப்போரும் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $400 பெறுவர்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் மட்டுப்பட்டு, பொருளியல் மீட்சி பெற்று, வேலையின்மை குறைந்து வந்தாலும், சிங்கப்பூருக்குக் குறிப்பிட்ட எதிர்மறை அபாயங்கள் இன்னும் நீடிப்பதாகப் பொதுச் சேவைப் பிரிவு குறிப்பிட்டது.
"ரஷ்யா-உக்ரேன் சண்டை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாண்டில் வெளிப்புற தேவைக்கான கண்ணோட்டம் மோசம் அடைந்துள்ளது. இது உலகளவில் விநியோகக் கட்டமைப்பில் இடையூறுகளை அதிகப்படுத்தி, பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சியையும் பாதித்துள்ளது," என்று தனது அறிக்கையில் அவ்வமைப்பு கூறியுள்ளது.
அத்துடன், பொருளியல் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்தும் தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கருத்தில்கொண்டும் வருடாந்திர மாறுவிகித சம்பளத்தொகை முடிவுசெய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.
இவ்வாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 முதல் 5 விழுக்காட்டிற்குள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அது 3 முதல் 4 விழுக்காட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
கடந்த ஆண்டில் பொருளியல் மீட்சி பெற்றதையடுத்து, ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், 2022 முதல் காலாண்டில் நாட்டின் பொருளியல் 3.7% வளர்ச்சி கண்டது.
சென்ற 2021ஆம் ஆண்டில் அரையாண்டு போனசாக 0.3 மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது, இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை வழங்குதொகையாக $350 முதல் $700 வரை கிடைத்தது.

