'அக்னிபாதை' ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், அம்முறையின்கீழ் முதல் சுற்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதத்தில் இருந்து ஆட்சேர்ப்புக்கான பதிவு தொடங்கவிருக்கிறது.
'அக்னிபாதை' திட்டத்திற்கு எதிராக நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பல சந்தைகள் மூடப்பட்டன.
அந்த நான்காண்டு 'அக்னிபாதை' வேலைத் திட்டமானது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வித வேலை உத்தரவாதமும் வழங்காது என்றும் ஓய்வூதியப் பலன்களோ பணிக்கொடையோ கிடைக்காது என்றும் கூறி, ராணுவத்தில் சேர விரும்பும் இளையர்கள் போராடி வருகின்றனர்.
அத்திட்டத்தின்கீழ் ராணுவத்தில் இணைவோரில் 25 விழுக்காட்டினர் மட்டுமே வழக்கமான 15 ஆண்டுகால சேவைக்குத் தேர்வுசெய்யப்படுவர். 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படும் அந்த 25 விழுக்காட்டினருக்கு ஓய்வு ஊதியச் சலுகைகள் உண்டு.
'அக்னிபாதை' திட்டம் குறித்து இம்மாதம் 15ஆம் தேதி அறிவிப்பு வெளியானதையடுத்து, பல மாநிலங்களிலும் போராட்டம் வெடித்தது. அதன்படி, 17.5-21 வயதுக்கு இடைப்பட்டவர்களே முப்படைகளில் சேர முடியும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் உச்ச வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, நேற்றைய முழு அடைப்பு காரணமாக 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப் பட்டன.
காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அரியானாவின் பல இடங்களிலும் சாலைகளை மறித்து, இளையர்கள் போராடினர். கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, சென்னை ரயில் நிலையங்களில் குறைந்த அளவிலேயே நடைமேடை நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.