சிங்கப்பூரில் 60 மற்றும் அதற்குமேல் வயதுடைய மூத்த குடிமக்களில் 80,000 பேர் இன்னும் முதலாவது கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இரண்டு தவணை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்களைக் காட்டிலும், மூன்றாவது தடுப்பூசியாக கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படும் அல்லது உயிரிழக்கும் அபாயம் மூன்று மடங்கு குறைவு என்று அமைச்சர் ஓங் கூறியிருக்கிறார்.
மூன்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட 1,000 மூத்த குடிமக்களில் மூன்று பேர் மட்டுமே அப்படி மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாறாக, இரண்டு தடுப்பூசிகள் மட்டும் போட்டுக்கொண்டோரிடத்தில் அவ்விகிதம் 1,000 பேருக்குப் பத்துப் பேராக உள்ளது.
அதேபோல, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரிடத்தில் அந்த அபாயம் மிகவும் அதிகம். அதாவது, அத்தகைய 1,000 பேரில் 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவிற்கு கடுமையான தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
ஆதலால், அடுத்த கொவிட்-19 அலைக்கு முன்னதாக மூத்த குடிமக்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமைச்சர் ஓங் 'டிக் டாக்' காணொளி ஒன்றின் வழியாக வலியுறுத்தி இருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒன்பது மாதங்களுக்குமுன் கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மூத்த குடிமக்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்களில் இருப்போர், நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இப்போதைக்கு, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட 4.2 மில்லியன் பேர் கூடுதல் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
மூத்த குடிமக்கள் எந்த ஒரு தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் விரைவில் நடமாடும் தடுப்பூசிக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் திரு ஓங் தெரிவித்து இருக்கிறார்.
"அடுத்த ஓரிரு மாதங்களில், புதிய கொவிட்-19 அலையை நாம் எதிர்பார்க்கலாம். ஆனாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன்மூலம் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதால் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை," என்றும் அமைச்சர் கூறினார்.

