மூலாதாரப் பணவீக்கம் 13 ஆண்டு காணாத உயர்வு

மூலாதாரப் பணவீக்கம் 13 ஆண்டு காணாத உயர்வு

2 mins read

உணவு, மின்சாரம், எரிவாயு விலை உயர்வு எதிரொலி

சிங்­கப்­பூ­ரில் மூலா­தா­ரப் பய­னீட்­டா­ளர் விலை­கள் கடந்த மாதம், 13 ஆண்­டு­களில் இல்­லாத அளவு வேக­மாக உயர்ந்­தன. உணவு, மின்­சா­ரம், எரி­வாயு விலை அதி­க­ரிப்பு இதற்­கான கார­ணங்­களில் அடங்­கும்.

தங்­கு­மி­டம், தனி­யார் போக்கு­வரத்­துச் செல­வு­க­ளைத் தவிர்த்த மூலா­தா­ரப் பண­வீக்­கம், ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் 3.6 விழுக்­கா­டாக உயர்ந்­தது. கடந்த ஏப்­ரல் மாதம் இது 3.3 விழுக்­காடாக இருந்­தது.

2008ஆம் ஆண்டு டிசம்­பருக்குப் பிறகு பண­வீக்­கம் இந்த அளவுக்கு உயர்ந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை. அப்­போது மூலா­தாரப் பண­வீக்­கம் 4.2 விழுக்­காட்டை எட்­டி­யி­ருந்­தது.

வரும் மாதங்­களில் மூலா­தா­ரப் பண­வீக்­கம் தொடர்ந்து அதி­க­ரித்து, ஆண்­டி­று­தி­யில் மித­ம­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று கூறின.

கடந்த மாதம் பய­னீட்­டா­ளர் விலை­கள் 5.6 விழுக்­காடு உயர்ந்­தது. ஒப்­பு­நோக்க, ஏப்­ர­லில் அது 5.4 விழுக்­காடு அதி­க­ரித்து இருந்­தது.

கடந்த மாதம் உணவு விலை உயர்வு 4.5 விழுக்­காட்­டைத் தொட்­டது. ஏப்­ர­லில் அது 4.1 விழுக்­கா­டாக இருந்­தது.

மின்­சார, எரி­வா­யுக் கட்­ட­ணங்­கள் கடந்த மாதம் ஆண்டு அடிப்­படை­யில் 19.9 விழுக்­காடு உயர்ந்­தன. மின்­சார விற்­ப­னை­யா­ளர்­கள் வழங்­கிய மின்­சா­ரத் திட்­டங்­க­ளின் சரா­சரி விலை­ உயர்வே இதற்­குக் கார­ணம்.

சேவைப் பண­வீக்­கம் 2.6 விழுக்­கா­டாக உயர்ந்­தது. விடுமுறைக்­கான செல­வி­னங்­களும் போக்­கு­வ­ரத்­துச் சேவைக் கட்­ட­ணங்­களும் வேக­மாக உயர்ந்­தன.

சில்­லறை, இதர பொருள்­களின் பண­வீக்­கம் 1.8 விழுக்­கா­டாக இருந்தது. துணி­ம­ணி­கள், கால­ணி­கள், தனி­ந­பர் பரா­ம­ரிப்­புப் பொருள்­கள் ஆகி­ய­வற்­றின் விலை­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது இதற்­குக் கார­ணம்.

வீட்டு வாட­கை கணி­ச­மாக உயர்ந்­த­தால் தங்­கு­மி­டச் செல­வு­ 4 விழுக்­கா­டு கூடியது.

எண்­ணெய் விலை உயர்­வு கார­ண­மாக, தனி­யார் போக்கு­வரத்து விலைக் கட்டணம் 18.5 விழுக்­காடு உயர்ந்­தது.

ரஷ்யா-உக்­ரேன் போர், வட்­டார அள­வில் கொவிட்-19 பெருந்­தொற்று நில­வ­ரம் கார­ண­மாக பொருள்­க­ளின் விநி­யோ­கத் தொட­ரில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­டுள்­ள­தால், உலகப் பண­வீக்க நெருக்­கு­தல் நிலை தொடர்ந்து வலு­வாக இருப்­ப­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் கூறின.

புவி­சார் அர­சி­யல் பதற்­ற­நி­லை­கள், கடு­மை­யான விநி­யோ­கக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக குறு­கிய காலத்­தில் கச்சா எண்­ணெய் விலை­ தொடர்ந்து ஏற்­ற­மாக இருக்­கும். அதே­வே­ளை­யில், உணவு, இதர பொருள்­க­ளின் விலை­களும் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உள்­நாட்­டில் தொழி­லா­ளர் சந்தை தொடர்ந்து இறுக்­க­மாக இருக்­கும் என்­று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இத­னால் சம்­பள உயர்வுக்­கான ஆத­ரவு நில­வும் என ஆணை­ய­மும் அமைச்­சும் விளக்கின.

அதி­க­ரித்­து­வ­ரும் பண­வீக்­கத்­தைத் தணிக்க சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் இருந்து நாண­யக் கொள்­கையை மூன்று முறை கடுமை­யாக்கி உள்­ளது.