அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் நாடு முழுவதும் கருக்கலைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஏறக்குறைய பாதி மாநிலங்களில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதையொட்டி கருக் கலைப்பு நிலையங்களின் கதவுகள் மூடப்படுகின்றன.
ஐம்பது ஆண்டுகாலம் நடப்பில் இருந்த கருக்கலைப்பு சட்டபூர்வ அனுமதியை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அமெரிக்க அதிபர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை 'சோகத்தை ஏற்படுத்தியுள்ள தவறு' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு பெண்களின் ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பல மாநிலங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.
'எங்கள் உடல், எங்கள் வாய்ப்பு', 'கருக்கலைப்பு எங்களுடைய தனிப்பட்ட உரிமை', 'நாங்கள் உங்களுடைய அடைகாக்கும் சாதனமல்ல' போன்ற வாசகங்களை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அரிசோனா மாநிலத்தின் தலைநகரான ஃபீனிக்ஸில் உச்சகட்டமாக அரசாங்க செனட் கட்டடத்தின் சன்னல்களையும் கதவுகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் எதிர்ப்பாளர்கள் சிலர் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நேற்றும் தொடர்ந்து பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அர்கன்சாஸ் மாநிலத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. எந்தவொரு சட்டத்தையும் உடனே அமல்படுத்தக்கூடிய சட்டம் ஏற்கெனவே அங்கு நடப்பில் இருப்பதால் கருக்கலைப்புத் தடை அமல்படுத்தப்பட்டது.
லிட்டில் ராக் நகரில் உள்ள ஒரு கருக்கலைப்பு நிலையத்தின் ஊழியர்கள், கருக்கலைப்புக்கு பதிவு செய்திருந்த பெண்களை அழைத்து முன்பதிவு ரத்துச் செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்தனர்.
"தீயச் செய்தி எந்த நேரத்திலும் தாக்கும் என்று தயாராக இருந்தோம். ஆனால் தாக்கும்போதுதான் அதன் கடுமையை உணர முடிகிறது. எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது, வேதனையளிக்கிறது," என்று அந்த நிலையத்தின் ஊழியர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 36 மில்லியன் பெண்கள் தங்களுடைய மாநிலங்களில் கருக்கலைப்பு வாய்ப்பை இழப்பார்கள் என்று கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமான 'பிளேன்ட் பேரண்ட்ஹுட்' மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையே வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே கருக்கலைப்பை எதிர்ப்பவர்களும் தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் தீர்ப்புக்கு எதிராக நேற்று அமெரிக்கா முழு வதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

