அடுத்த கொள்ளைநோய் குறித்து பிரதமர் லீ எச்சரிக்கை
கொவிட்-19 உலகத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த கொள்ளைநோய்க்கு இன்னமும் அதிக கவனத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
ருவாண்டாவின் கிகாலியில் வெள்ளிக்கிழமை நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பொதுச் சுகாதார ஆயத்தநிலை, நாடளவில் கொள்ளைநோயை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 காலத்தில் கிருமிப் பரவல் முதல் வளரும் நாடுகளுக்கு உதவி அளிப்பது வரை இடைவெளி இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆயத்தநிலை போதாது. அடுத்து வரும் கொள்ளைநோயை எதிர்கொள்ள இன்னும் அதிகம் செய்தாக வேண்டும். உலகச் சுகாதார நிறுவனத்தின் சீர்திருத்தம், கிருமி உருவாகி பரவு வதைக் கண்டுபிடிக்க அனைத்துலக அளவிலான கண்காணிப்பு முறை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என்று பிரதமர் லீ கூறினார்.
வளரும் நாடுகளில் பலவற்றில் இன்னமும் போதுமான அளவு தடுப்பூசி போடவில்லை.
தளவாட வரம்புகள், பொதுச் சுகாதாரத்தை பாதுகாப்பதில் உள்ள சவால்களால் இத்தகைய நாடுகளில் தடுப்பூசி உரியவர் களிடம் போய்ச் சேரவில்லை.
இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க பொறுமையான முயற்சிகள் தேவை. இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
"ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த தொற்றுநோய்க்கு நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அனைத்துலக ஒத்துழைப்பின் முக்கிய அம்சம்," என்று திரு லீ சொன்னார்.
தற்போதைய நிலவரம் சீராக இருப்பதுபோல தோன்றினாலும் இன்னமும் நெருக்கடி ஓயவில்லை என்றார் அவர்.
கொள்ளைநோய்க்கு எதிரான பன்முக முயற்சிகள் சில இடைவெளியைக் குறைத்திருந்தன.
முதல் முயற்சி, 'கோவாக்ஸ்' எனும் தடுப்பூசி பகிர்வுத் திட்டம். இதில் அரசாங்கங்களும் தடுப்பூசி தயாரிப்பாளர்களும் வளரும் நாடு களுக்கு தடுப்பூசி சீராக விநி யோகிக்க வழிவகை செய்தது.
இரண்டாவது முயற்சி, கொள்ளைநோய் ஆயத்தநிலைக்கு நிதியாதரவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 'ஜி20' உயர்மட்டக் குழு.
உலக விநியோகச் சங்கிலியின் பலவீனங்களையும் உலகமயமாக்கலில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை யையும் தற்போதைய கொள்ளைநோய் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றன.
இந்த நிலையில் தன்னைப் பேணித்தனம் மற்றும் அனைவரது நிலைமையை மோசமாக்கும் பொருளியல் கொள்கைகள் குறித்து அவர் எச்சரித்தார்.
குறிப்பிட்ட காலத்தில் பாதுகாப்புச் சாதனங்கள், கொவிட்-19 சோதனைக் கருவிகள், தடுப்பூசி போன்றவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
அப்போது சில அரசாங்கங்கள் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு சுதந்திரமான சந்தையில் தலையிட்டதாக பிரதமர் கூறினார்.
விநியோகிப்பாளர்கள் உறுதி அளித்தபடி பொருட்களை விநியோகிக்க முடியாததால் உலகமயமாக்கலில் நாடுகளின் நம்பிக்கை ஆட்டம் கண்டது.
"இரு தரப்புக்கும் வெற்றியளிக்கும் பொருளியல் ஒத்துழைப்பு களையும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
"மாறாக மீள்தன்மையுடைய உலகமயமாக்கலை நோக்கி நாம் நடைபோட வேண்டும்," என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

