ஜவுளி, நீர் இரைக்கும் மோட்டார் இயந்திரங்கள், மாவு அரவைக் கருவிகள், முக்கிய உதிரி பாகங்கள் தயாரிப்பில் உலக மையமாக தமிழ் நாடு உருவாகும் என்று இந்திய ஜவுளி, வர்த்தக தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு ஊக்குவிப்பாகத் திகழும் என்று அவர் உறுதிபட கூறினார்.
இந்தியப் பொருளியலின் மதிப்பு இப்போது 3 டிரிலியன் டாலராக (ஒரு டிரிலியன் என்பது மில்லியன் மில்லியன்) இருக்கிறது என்றும் அது விரைவில் 30 டிரிலி யன் டாலராகும் என்றும் அமைச்சர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உலகச் சந்தையில் எல்லா துறைகளையும் வளைத்துப் பிடிக்க விரும்புகிறது என்றார் அவர்.
இந்திய ஜவுளித் துறை உள் நாட்டில் அதிக அளவில் வேலைகளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டது என்று தெரிவித்த அமைச்சர், பல நாடுகளுடன் தாராள வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள இந்தியா விரும்புவதாகவும் இதன் தொடர்பில் அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறினார்.
இந்திய ஜவுளிப் பொருள்கள் உலக சந்தைகளைத் தீர்வை எதுவும் இல்லாமல் எட்ட அந்த உடன்பாடுகள் வழிவகுக்கும் என்று அமைச்சர் தெரிவித்ததாக அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிட்டது. கோவையில் ஜவுளி சந்தை 2022ஐ தொடங்கிவைத்து அமைச்சர் பேசினார்.
இந்தியப் பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் நல்லுறவை நிலைநாட்டி வருகிறார் என்றும் அதன் காரணமாக உலக அளவில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய ஜவுளித்துறை 440 பில்லியன் டாலர் ஏற்றுமதி சாதனை நிகழ்த்தி இருப்பதாகவும் அதற்கு அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகளும் இந்தத் தொழில்துறை மேற்கொண்ட கடும் முயற்சிகளும் காரணம் என்றாரவர்.
சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் ஒற்றுமையாகப் பாடுபட்டு இந்தியாவை உலகிலேயே ஆகப் பெரிய உற்பத்தி மையமாக ஆக்க முன்வரவேணடும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஜவுளி தொழில்துறையினருடன் அவர் பேச்சு நடத்தினார்.

