மூத்த மருத்துவ வல்லுநர் சொல்கிறார்
தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு வெளியிட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று மூத்த நச்சுயிரியல் வல்லுநர் யோங் பூவொரவான் தெரிவித்து இருக்கிறார்.
பெரும்பாலான நோயாளிகளிடம் இலேசான அறிகுறிகள் தெரிவதே இதற்கு டாக்டர் யோங் கூறும் காரணம்.
பொதுச் சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவின்படி, அங்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2,378 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றால் மேலும் 17 பேர் இறந்துவிட்டனர்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதால் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இதனால் அவர்களின் குடும்பத்தினரையும் கிருமி தொற்றக்கூடும் என்றும் டாக்டர் யோங் கூறியுள்ளார்.
குழந்தைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் சாதாரண சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா அல்லது கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று சொல்வது கடினம் என்றார் டாக்டர் யோங்.
இம்மாதத்தில் கொவிட்-19 வேகமாகப் பரவும் என்றும் ஜூலை-செப்டம்பருக்கு இடையில் உச்சத்தை எட்டலாம் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
அதன்பின் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவல் குறையத் தொடங்கும் என்ற அவர், வழக்கமாக சுவாச நோய் பாதிப்பு உச்சத்தில் இருக்கக்கூடிய ஜனவரி மாதத்தில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு உயரக்கூடும் என்றும் கூறினார்.
சுலாலொங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நச்சுயிரியல் உன்னத மையத்தின் தலைவரான டாக்டர் யோங், தமது மையத்தின் ஆய்வில் பங்கெடுத்த குழந்தைகளில் பாதிப் பேர் அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
"இப்போதைய கொவிட்-19 தொற்று அறிக்கையானது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கையை அறிய, ஒவ்வோர் இடத்திலும் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும்," என்று டாக்டர் யோங் சொன்னார்.
மலேசியாவில் 11% அதிகரிப்பு
இதனிடையே, மலேசியாவில் கடந்த வாரத்தில் கொவிட்-19 தொற்று, அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் 10.9% கூடி, 14,195ஆகப் பதிவானதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
ஜூன் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்ட டாக்டர் ஹிஷாம், அதனால் பொது மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் மையங்களையும் நாடியோர் எண்ணிக்கையும் உயர்ந்ததாகக் கூறினார்.
நூறாயிரம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு மலேசியாவில் 26,946 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், கொவிட்-19 மரணங்கள் குறைந்துள்ளன.
"கொவிட்-19 தொற்று உயிர் இழப்பு விகிதம் 33.8% குறைந்து, 21லிருந்து 13 ஆனது. ஒட்டுமொத்தத்தில், இதுவரை 35,745 பேர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்," என்று டாக்டர் ஹிஷாம் கூறினார்.
'ஜூலையில் உச்சம் தொடலாம்'
இதற்கிடையே, ஓமிக்ரான் துணைத் திரிபுகளால் இந்தோனீசியாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இப்போதைய கொரோனா அலை, ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் உச்சம் தொடலாம் என்றும் அதன்பின் குறையத் தொடங்கலாம் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் புடி சடிக்கின் தெரிவித்துள்ளார்.
அப்படி உச்சநிலையை எட்டும் போது, அன்றாடம் அங்கு கிட்டத்தட்ட 17,400 பேரைக் கிருமி தொற்றும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 3வது வாரத்தில் அங்கு ஓமிக்ரான் பரவல் உச்சத்தில் இருந்தபோது ஒருநாள் பாதிப்பு 58,000 வரை எட்டியது.
இதனிடையே, ஜூன் 25ஆம் தேதி வரையிலான வாரத்தில் ஒருநாள் சராசரித் தொற்று 1,688ஆக உயர்ந்தது. இது, அதற்கு முந்திய வாரத்தைவிட 70% அதிகம்.

