மானியம் அகற்றப்படுகிறது; சமையல் எண்ணெய்யை வாங்கிக் குவிக்கும் மக்கள்

மானியம் அகற்றப்படுகிறது; சமையல் எண்ணெய்யை வாங்கிக் குவிக்கும் மக்கள்

2 mins read
79506e72-4e60-4b29-87f7-51af7856fcb2
விலை குறைவாக உள்ள ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ள பிளாஸ்டிக் பைகளையும் பொதுமக்களும்  சிறு வணிகர்களும் வாங்கிக் குவித்து வருகின்றனர்.  படம்: தி மலேய் மெய்ஸ் -

மலேசியாவின் பல இடங்களில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது.

அங்கு சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் வரும் ஜூலை 1ம் தேதி நீக்கப்படும்.

குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் உள்ள சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்ட மானியங்கள் அகற்றப்படும்.

அதற்கு முன்னதாக மலேசியர்கள் சமையல் எண்ணெய்யை வாங்கி குவித்து வருவதாக மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறியது.

மானியங்கள் அகற்றப்பட்ட பின்னர் சமையல் எண்ணெய்யின் விலை அதிகமாகக் கூடும் என்று கருதப்படுகிறது.

பிளாஸ்டிக் போத்தலில் உள்ள சமையல் எண்ணெய் பல கடைகளில் கிடைக்கவில்லை.

விலை குறைவாக உள்ள ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ள பிளாஸ்டிக் பைகளையும் பொதுமக்களும் சிறு வணிகர்களும் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

புதிய சரக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும் எல்லாருக்கும் போதுமான அளவுக்கு சமையல் எண்ணெய்யைக் கடைகளுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றும் கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.

சில கடைக்காரர்கள் அடிக்கடி புதிய சரக்குகளைக் கொண்டு வந்தாலும் சமையல் எண்ணெய் உடனேயே விற்று முடிந்துவிடுகிறது என்று குறைபட்டுக் கொள்கின்றனர்.

ஓரிடத்தில் சமையல் எண்ணெய் கிடைக்கிறது என்று தெரிந்தாலே மக்கள் பறந்துபோய் அதை வாங்கி விடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

அதனால், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவு சமையல் எண்ணெயைத் தான் வாங்க முடியும் என்ற கட்டுப்பாடுகளை சில கடைக்காரர்கள் விதித்துள்ளனர்.

ஆனால் சமையல் எண்ணெய் அத்தியாவசியத் தேவை என்றும் அதை வாங்குவதைத் தவிர்க்க முடியாது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்ல, ஏற்கெனவே மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து விட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையே, மலேசியாவில் உள்ள விலைவாசி உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அந்நாட்டு மாணவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

சமையல் எண்ணெய்க்கான மானியத்தை அகற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையையும் அவை குறைகூறின.