இனம் என்பது அரசியல் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், இந்தியர் அல்லது மலாய்க்காரர் ஒருவர் சிங்கப்பூர் பிரதமர் ஆக முடியாது என்பது சரியான கருத்தில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
பிபிசி ஒளிவழியின் 'ஹார்ட்டோக்' நிகழ்ச்சிக்கு அளித்த விரிவான பேட்டியில் திரு சண்முகம் இதைத் தெரிவித்தார். அந்தப் பேட்டி புதன்கிழமை (ஜூன் 29) அன்று ஒளிபரப்பானது.
சிங்கப்பூரில் உள்ள பிரதமர்கள் அனைவரும் சீனர்களாக இருந்துள்ளதாகக் குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஸ்டெஃபன் சாக்கர், திரு சண்முகம் உட்பட இந்திய வம்சாவளியினர் யாரும் சிங்கப்பூர் பிரதமர் ஆக முடியாது என்பது உண்மைதானே என்று பேட்டியின்போது கேட்டார்.
அதை மறுத்த திரு சண்முகம், பிரிட்டனில் எத்தனை வெள்ளையர் இல்லாதவர்கள் பிரதமராக இருந்துள்ளனர் என்று பதில்கேள்வி கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என ஒவ்வோர் இனமும் விரும்புவதைக் கருத்தாய்வுகள் காட்டுவதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்தாய்வுகளில் ஓர் இந்தியர் அல்லது மலாய்க்காரர் ஆதரவில் சுமார் 20 விழுக்காடு பின்தங்கி இருக்கலாம் என்றார் திரு சண்முகம்.
ஆனால் இந்த இடைவெளி தாண்டமுடியாதது அல்ல என்றார் அமைச்சர்.
பொதுத் தேர்தலில் தங்களை வெற்றிக்கு வழிநடத்திச் செல்லக் கூடியவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நல்ல மலாய் அல்லது இந்திய வேட்பாளர் இந்த இடைவெளியைத் தாண்டி போதிய ஆதரவைப் பெறலாம் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
அதனால் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் சிங்கப்பூர் பிரதமர் ஆவது சாத்தியமே என்ற அவர், தன்னை அதில் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
இவ்வேளையில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு சிங்கப்பூர் விதிக்கும் மரண தண்டனையைக் குறைகூறுவோர், அது பலரது வாழ்க்கையைக் காப்பாற்றி சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறுவதாகவும் அமைச்சர் சொன்னார்.
போதைப் பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிப்பது சரியான கொள்கை என்பதில் அமைச்சருக்கு ஐயம் ஏதும் உண்டா என்று அறிவிப்பாளர் திரு சாக்கர் கேட்டார்.
போதைப் பொருள் கடத்த நினைப்போரை மரண தண்டனை தீவிரமாகத் தடுக்கிறது என்பதற்கு தெளிவான ஆதரங்கள் இருப்பதால்தான் அந்தத் தண்டனை விதிக்கப்படுவதாக திரு சண்முகம் பதில் அளித்தார்.

