ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் ஒருவர் கொல்லப்பட்டதன் காணொளியைப் பதிவுச் செய்து அதைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) விசாரணை நடத்துமாறு இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த அதிர்ச்சித் தாக்குதலில் தையல்கடை நடத்திவரும் கன்னையா லால் தேலி என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கடை புகுந்து வலுக்கட்டாயமாகக் கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து வாளால் அவரைத் தாக்கிக் கொன்றனர்.
இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம்வந்ததை அடுத்து மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜகவின் முன்னாள் உறுப்பினர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டார் என்றும் இதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
நூபுர் சர்மாவிற்கு ஆதரவு அளிக்கும் யாவருக்கும் இதே நிலைதான் என்று ஆயுதங்கள் ஏந்தியவாறு எச்சரிப்பதாக அந்தக் காணொளி அமைந்துள்ளது.
இதற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் காணொளியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இளைஞரைக் கொடூரமான முறையில் கொன்றதாகக் கூறப்படும் கொலையாளிகள் முகம்மது ரியாஸ், கௌஸ் முகம்மது ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகவையைச் சேர்ந்த குழு ஒன்றை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்புடையதா என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் கூடுதலாக 600 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

