சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கான மின் கட்டணங்கள் உயரவுள்ளன.
இதனால் சிங்கப்பூரில் உள்ள பாதி வீடுகள் கூடுதலான மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு (kWh) 30.17 காசு மின்கட்டணமாக (பொருள் சேவை வரிக்கு முன்னதாக) வசூலிக்கப்படும். மின் நிறுவனமான எஸ்பி குழுமம்
வியாழக்கிழமை (ஜூன் 30) அன்று இதைத் தெரிவித்தது.
தற்போது மின்கட்டணமாக ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 27.94 காசு வசூலிக்கப்படுகிறது.
இதன்வழி மின்கட்டணம் எட்டு விழுக்காடு உயர்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சிங்கப்பூரில் மின் கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன.
இவ்வேளையில் வீடுகளுக்கான எரிவாயு கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்த்தப்படும்.
குழாய் வழி எரிவாயுவை விநியோகிக்கும் சிட்டி எனர்ஜி நிறுவனம் இதை அறிவித்தது.
தற்போது, பொருள் சேவை வரியைச் சேர்க்காமல், எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 21.66 காசாக உள்ளது.
இனி எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 23.09 காசாக உயரும். இது 6.6 விழுக்காட்டு உயர்வாகும்.
உலகளாவிய எரிவாயுக் கட்டணம் உயர்ந்ததால் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை உயர்த்தியதாக எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜி நிறுவனமும் கூறின.

