தமிழ்நாட்டில் காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் பலரும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவில்லை என்பதால் பாதிப்புகள் பற்றி வெளியே தெரியவில்லை.
இந்நிலையில், மாநிலத்தில் கொவிட்-19 நான்காவது அலை மௌனமாக தலைதூக்கிவரக்கூடிய ஆபத்து உள்ளதாக மருத்துவர்களும் தொற்றுநோய் வல்லுநர்களும் அச்சம், கவலை தெரிவித்தனர்.
பரிசோதனையில் தொற்று இருப்பதாக தெரியவருவது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது போன்ற அம்சங்களின் அடிப்படையில் அடுத்த அலை ஏற்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்துவிடலாம்.
ஆனால் போதிய அளவுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்பதால் இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கக்கூடிய 4வது தொற்று அலை வெளியே தெரியாமல் மௌனமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 23ஆம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக தொற்றுடன் கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 10,000ஐ தாண்டியது.
ஜூன் 1ஆம் தேதி வாரம் சராசரியாக 80 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,285 ஆக இப்போது இருக்கிறது.
பரிசோதனை மூலம் தொற்று இருப்பதாக தெரியவருவோரின் வாராந்திர விகிதம் சீராக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 25,000 பிசிஆர் பரிசோதனைகள் இப்போது நடத்தப்படுகின்றன.
அந்த மாநிலத்தில் அன்றாடம் குறைந்தபட்சம் 3 லட்சம் பரிசோதனைகளை நடத்த முடியும்.
யாருக்காவது தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவில்லை என்றாலும்கூட தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்று பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி இருப்பதாக சுகாதாத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,827 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

