இமயமலையில் அமர்நாத் பனிலிங்கக் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை வேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்; 65 பேர் காயமடைந்தனர். இன்னும் 40 பேரைக் காணவில்லை.
கிட்டத்தட்ட 15,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
"தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தயார்நிலை காவல்படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன," என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் அதுல் கர்வால் தெரிவித்தார்.
"காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்படுகின்றனர். யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலே செல்ல வேண்டாம் என்று பக்தர்களை அறிவுறுத்தி வருகிறோம்," என்று இந்தோ-திபெத்திய எல்லைப் படையின் பேச்சாளர் விவேக் குமார் பாண்டே கூறினார்.
திடீர் வெள்ளத்தில் பல கூடாரங்கள் அடித்துச்செல்லப்பட்டதாக மீட்கப்பட்டவர்களில் சிலர் தெரிவித்தனர்.
திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தம் தெரிவித்தனர். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
43 நாள் அமர்நாத் யாத்திரை, கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது.