நாடு எதிர்நோக்கும் சவால்கள், மிரட்டல்களை வெற்றிகரமான முறையில் சமாளித்து மக்களுக்குச் சிறந்த சேவையாற்றவும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் அரசு- மக்களுக்கு இடையிலான நம்பிக்கை, பன்மய பின்னணி, அனுபவம் உள்ள எம்பிக்கள், கட்சிப் புதுப்பிப்பு ஆகியவை அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி கூறி இருக்கிறார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஓய்வுபெற்ற 20 மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விருந்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், கொவிட்-19 தொற்றைச் சமாளிப்பதில் நாம் நெடும் முன்னேற்றம் கண்டு இருப்பதற்கு அரசுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவும் வலுவான நம்பிக்கையே முக்கிய காரணம் என்றார். அதேபோல் சமூகத்தில் நிலவும் நம்பிக்கையும் அதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
"அந்த நம்பிக்கை கொரோனா தொற்று காலத்தின்போது ஏற்பட்ட ஒன்றல்ல.
"வழிவழியாக மசெக தலைமுறைத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல ஆண்டுகாலமாக பட்ட பாடுகளும் அவர்கள் பேணி பலப்படுத்திய பிணைப்பும் மசெகவுக்கு வாக்களித்த மக்களும் கட்சியும் அதற்குக் காரணம்," என்றார் அவர்.
"அதன் காரணமாகவே தேர்தல்களில் வெற்றி பெற்று மசெக சிங்கப்பூரர்களுக்கு குறிப்பாக நெருக்கடி காலத்தில் சேவையாற்ற முடிந்து வந்துள்ளது," என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற மசெக உறுப்பினர்களைப் போலவே கட்சிக்குப் புதிய தலைமுறையினர் தொடர்ந்து தேவை என்ற திரு லீ, நேர்மை, கடப்பாடு, ஆற்றல், பன்மய அனுபவமும், பின்னணியும் கொண்டவர்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என்றார்.
"மசெக உறுப்பினர்கள் எப்போதுமே வெள்ளை உடையில் காணப்படுவார்கள். ஆகையால், அவர்களின் யோசனைகளிலும் கண்ணோட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பர் என சிலர் நினைக்கக்கூடும்.
"ஆனால், அப்படி நினைப்பது தவறு. பன்மய குழுவைத் தேர்தலில் நிறுத்தவே முடிந்த வரை நாம் பாடுபடுகிறோம்.
"இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்துகிறார்கள்," என்றார் அவர். இந்தப் பன்மயத்தை நாம் தொடர்ந்து கட்டிக்காத்து வரவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் கூடுமானவரை தலைசிறந்த அணியை களமிறக்க வேண்டும்," என்று திரு லீ கூறினார்.
சவால்மிக்க நேரங்களில் கட்சியை எப்போதும் புதுப்பித்து ஆற்றல்மிக்கதாக, சிங்கப்பூரர்களுடன் அணுக்கத் தொடர்புள்ளதாக நாம் வைத்திருக்க வேண்டும் என்றும் திரு லீ வலியுறுத்தினார்.
"இந்தப் பணியை இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெறும் உறுப்பினர்களிடம் இருந்து மேற்கொண்டு இருக்கிறார்கள். பதவி விலகிய உறுப்பினர்களின் சாதனையைப் புதிய உறுப்பினர்கள் மேலும் பலப்படுத்துவார்கள். இதன் வழி மசெக தொடர்ந்து சிங்கப்பூரருக்குச் சேவையாற்ற முடியும். எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் திரு லீ 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய தொண்டுகளையும் அர்ப்பணிப்புச் சேவை களையும் பெரிதும் பாராட்டினார்.
அந்த உறுப்பினர்கள் சென்ற பொதுத் தேர்தலில் ஓய்வு பெற்றுக்கொண்டனர். ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், நாடாளுமன்ற முன்னாள் துணை நாயகர் சால்ஸ் சோங், முன்னாள் அமைச்சர்களான கோ பூன் வான், லிம் ஹங் கியாங், லிம் சுவீ சே, யாக்கோப் இப்ராஹிம் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் விருந்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான சீ ஹொங் டாட், ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டி உதவும் அந்த உறுப்பினர்களை அவர் பாராட்டினார். ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் திரு லீ கடிதத்தையும் நினைவுப்பொருளையும் வழங்கி சிறப்பித்தார்.

