இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நேற்று இலங்கையைவிட்டு தப்பி ஓட முயன்று அந்த முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டதாக தகவல்கள் கூறின.
விமானம் நிலையம் சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பி ஓட இருந்த இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
விமானம் வழி நாட்டைவிட்டு செல்ல முடியாமல் போனதையடுத்து கடற்படைக்குச் சொந்தமான சுற்றுக்காவல் கலன் ஒன்றில் தப்பிச் செல்ல அதிபர் கோத்தபாய ஆராய்ந்து வந்ததாக நேற்று அதிகாரத்துவ தகவல் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இலங்கை நொடித்துப் போகும் அளவுக்கு வந்துவிட்டதால் அந்த நாடு முழுவதும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டி உள்ளன. அதிபர், பிரதமர் இருப்பிடங்களில் பொதுமக்கள் புகுந்துவிட்டார்கள். அதற்கு முன்பே அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக சம்மதித்து ஜூலை 13ஆம் தேதியிட்ட (இன்று) கடிதத்தில் கையெழுத்திட்டு அதை நேற்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் மூலம் அனுப்பிவிட்டதாகவும் அந்தக் கடிதம் நாடாளுமன்ற நாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடிதம் பற்றி நாடாளுமன்ற நாயகரான மகிந்த யப்பா அபெவர்தன விடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர், முறையான அறிவிப்பை இன்று விடுப்பார் என்றும் டெய்லி மிரர் நேற்று குறிப்பிட்டது.
நாட்டின் புதிய அதிபர் இம்மாதம் 20ஆம் தேதி அரசமைப்புச் சட்டப்படி நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை தற்காலிக அதிபராக இப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொள்வார்.
இலங்கை நாடாளுமன்றம் இம்மாதம் 15ஆம் தேதி கூடவிருக்கிறது. அதிபர் பதவி வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி தாக்கலாகும். பிரதமர் ரணிலும் எதிர்த்தரப்பு தலைவர் சஜித் பிரேமதாசவும் அதிபர் பதவி ஏற்க முன்வந்து இருக்கிறார்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர், இப்போதைய அதிபரின் எஞ்சிய பதவிக்காலம் 2024 முடியும் வரை பதவி வகிப்பார்.
இலங்கை பொருளியல் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று சில மாதங்களாகவே பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஏற்கெனவே பதவி விலகிவிட்டார். ராஜபக்சே குடும்பத்தினர் இன்னமும் இலங்கையிலேயே இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. இலங்கையில் போராட்டம் உச்சமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை அதிபரின் அதிகாரபூர்வ இருப்பிடத்திற்குள் புகுந்துவிட்டார்கள்.
அதற்கு முன்பே கோத்தபாய ராஜபக்சே வெளியேறிவிட்டார். அந்த 73 வயது தலைவர் விமானம் நிலையம் சென்று துபாய் செல்ல முயன்றதாகவும் ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இலங்கை அரசமைப்புச் சட்டப்படி கைது செய்ய முடியாத அளவுக்கு அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. தான் பிடிபடலாம் என்ற பயத்தில் கோத்தபாய வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட விரும்புகிறார் என நம்பப்படுகிறது.
விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதை அடுத்து அதிபரும் அவருடைய மனைவியும் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் ராணுவத் தளம் ஒன்றில் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதே கதி அதிபரின் கடைசி தம்பியான பசில் ராஜபக்சேவுக்கும் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை துபாய் செல்ல முயன்ற அவர், விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டார். பசில் ராஜபக்சே அமெரிக்கக் குடியுரிமையையும் பெற்றவர்.
மேலும் செய்தி பக்கம் 8ல்

