மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே

மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே

2 mins read
33dae08b-ffdc-4eed-aa81-ae354bea24f0
சிங்கப்பூருக்கு வரவில்லை இலங்கை அதிபர் கோதபாய. படம்: கோதபாய ராஜபக்சே ஃபேஸ்புக் -

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவிலேயே சிக்கித் தவிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன

அதிபர் கோத்தபாய நேற்று மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கோ துபாய்க்கோ செல்லவிருக்கிறார் என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அவர் நேற்று (ஜூலை 13) இரவு எடுக்கவிருந்ததாகக் கூறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறவில்லை என்று இலங்கை செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவருக்கு பொதுமக்களுடன் விமானப் பயணம் செய்ய அச்சமாக இருப்பதே அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

இலங்கையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவர் தமது மனைவி, இரு பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார்.

மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான நஷீத், கோத்தபாயவை தமது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இலங்கையைவிட்டு கோத்தபாய தப்பி ஓடிவிட்டதை இலங்கை விமானப் படை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளன.

இதனிடையே ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக் கூடாது என்கிற எதிர்ப்பு குரல்கள் மாலத்தீவில் வலுத்துள்ளன. இலங்கை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ராஜபக்சேவை மாலத்தீவை விட்டே வெளியேற்ற வேண்டும்; மாலத்தீவு- இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மாலத்தீவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவும் கோத்தபாயவுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் கோத்தபாய ராஜபசே மாலத்தீவின் வெலேனா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் வருவர் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

அவர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகவும் அவருக்கு இங்கே உறவினர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.