சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் நடப்பில் இருந்த அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதன் ஆண்டறிக்கையில் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், பெரும்பாலும் தீவிரவாதச் சித்தாந்தத்திற்குச் சுயமாக ஈர்க்கப்படும் தனிநபர்களிடமிருந்து எழுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் 45 பேர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவல் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவின்கீழ் வைக்கப்பட்டனர்.
அவர்களில் 33 பேர் சிங்கப் பூரர்கள், 12 பேர் வெளிநாட்டினர் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டது.
மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றங்களுக்காக 13 பேர் தண்டிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், 10 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
தீவிரவாதப் போக்கைப் பின்பற்றுவோர் கிருமித்தொற்றுக் காலத்தின்போது உருவாக்கிய திட்டங்களை தற்போது நடை முறைப்படுத்தக்கூடும் என்று அது தெரிவித்தது.
எனினும், தற்போது சிங்கப்பூர் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் உடனடியாக நடத்தப்படுவதற்கான எந்த குறிப்பிட்ட வேவுத் தகவலும் இல்லை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது. ஆனால் அத்தகைய மிரட்டல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

