சமூக ஊடகங்களில் வெளியான குரல் பதிவு ஒன்று, அதிமுக வட்டாரத்தில் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் தொலைபேசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுவதாக குரல் பதிவு அமைந்து உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உட்பட முக்கியப் புள்ளிகளின் அதிர்ச்சிகரமான தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்பது எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் மற்றவர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குரல் பதிவு தெரிவிக்கிறது.
"முன்னாள் அமைச்சர் தங்கமணி, கே.பி முனுசாமி ஆகியோர் ஆளும் திமுகவுடன் நெருக்கமாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே ஆளும் கட்சியைக் குறித்து அவர்கள் விமர்சிப்பதில்லை.
"எடப்பாடி பழனிசாமி தமது ஆட்சிக்காலத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அடித்த கொள்ளை களைக் கண்டுகொள்ளவில்லை. திமுகவுக்கு எதிராக பேட்டி தருவதையே அதிமுகவினர் நிறுத்திவிட்டனர். தளவாய் சுந்தரம் இந்தியாவுக்கே தரகராக வேலை பார்க்கிறவர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் நூறு, இருநூறு கோடிக்கு சொத்துகள் குவித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய சொத்துகளை பாதுகாக்க அடக்கி வாசிக்கின்றனர்," என்று தொலைபேசி உரை யாடலில் குரல் பதிவு தெரிவிக்கிறது.
ஆனால் அதிமுக நிர்வாகி கோலப்பன் உட்பட யாரிடமும் நான் பேசவில்லை என்று பொன்னையன் கூறியுள்ளார்.
"தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி என் குரல் போல 'மிமிக்ரி' செய்யப்பட்டு உள்ளது. அது போலியான குரல் பதிவு," என்றார் அவர்.
இந்த நிலையில், "என்னிடம் பொன்னையன் கைபேசியில் பேசியது உண்மைதான், 'மிமிக்ரி' எதுவும் இல்லை," என்று அவருடன் உரையாடியதாகக் கூறப்படும் நாஞ்சில் கோலப்பன் தெரிவித்து உள்ளார்.
"ஜூலை 9ஆம் தேதி பொன்னை யனுடன் இரவு 9.59 முதல் 17.28 நிமிடங்கள் பேசினேன். தனது எண்ணம் பன்னீர்செல்வத்திடம் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே பொன்னையன் பேசியுள்ளார்," என்றுஅவர் கூறினார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வலுப்படும் வேளையில் அவருக்கு பாதிப்ைப ஏற்படுத்துவதற்காக ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் இந்தக் குரல் பதிவை வெளியிட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழ்நிையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், 18ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுடன் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறும் முதல் அதிமுக எல்எல்ஏக்கள் கூட்டம் இது. மற்றொரு நிலவரத்தில் சசி கலாவும் பன்னீர்செல்வமும் ரகசிய மாக சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

