அதிபர் பதவி விலகல் கடிதத்தை கோத்தபாய ராஜபக்சே சமர்ப்பித்துவிட்டதாகத் தகவல்
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு சிங்கப்பூர் வந்திறங்கினார். இவர் இருந்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
திரு கோத்தபாயவுடன் அவருடைய மனைவியும் மெய்க்காப்பாளர்கள் இருவரும் பயணம் மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்சமயம் இவர் சிங்கப்பூரில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரசாங்க மூலம் ஒன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது. ஆனால், இவர் எத்தனை நாள்கள் இங்கு தங்குவார் என்பது பற்றித் தெரியவில்லை.
பின்னர் சிங்கப்பூரில் இருந்து திரு கோத்தபாய, சவூதி அரேபியாவுக்குச் செல்ல இருப்பதாக, பெயரிடப்படாத மாலத்தீவு அதிகாரிகளைச் சுட்டி ஏபி செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டது. இவர் இங்கு சிறிதுகாலம் தங்கிவிட்டு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் செல்வார் என்று வேறு சில தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் கோத்தபாய, 73, தம் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டன.
இலங்கையில் இதுவரை இல்லாத பொருளியல் நெருக்கடி நிலவி வரும் வேளையில், அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு எதிராக நாட்டு மக்களே கொந்தளித்து போயுள்ளனர். இந்நிலையில், அதிபர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் தாம் விலகுவதாகக் கூறியிருந்த திரு கோத்தபாய, சொன்ன வாக்கை காலக்கெடுவிற்குள் நிறைவேற்றத் தவறினார்.
இலங்கையில் இருந்து தப்பி அருகிலுள்ள மாலத்தீவுக்கு சென்ற இவர், நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு சிங்கப்பூர் வரவிருந்தார்.
ஆனால், அந்த விமானத்தில் மற்ற பயணிகளுடன் பறக்க இவர் அஞ்சியதால் அதில் இவர் ஏறவில்லை என்று இலங்கையின் டெய்லி மிரர் செய்தித்தளம் குறிப்பிட்டு இருந்தது.
திரு கோத்தபாயவின் பதவி விலகலுக்காக இலங்கை மக்கள் காத்திருந்த வேளையில், தலைநகர் கொழும்பு நேற்று அமைதியாகக் காட்சியளித்தது.
கோத்தபாய இங்கு அடைக்கலம் நாடவில்லை: அமைச்சு
திரு கோத்தபாயவின் சிங்கப்பூர் வருகை குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார். சிங்கப்பூருக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டுள்ள திரு கோத்தபாயவுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதை அப்பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
"அவர் (திரு கோத்தபாய) இங்கு அடைக்கலம் நாடவும் இல்லை, அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவும் இல்லை. சிங்கப்பூர் பொதுவாக அடைக்கலத்திற்கான கோரிக்கைகளை ஏற்பதில்லை," என்று அப்பேச்சாளர் விவரித்தார்.
திரு கோத்தபாய, சமூக வருகை அனுமதியின்கீழ் இங்கு வந்திருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது.
"பொதுமக்கள், சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகள், வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், சமூக வருகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
"சட்டவிரோதமாகக் கருதப்படும் ஒன்றுகூடல்களில் பங்கேற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை எச்சரித்தது.
திரு கோத்தபாய இருந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், இரவு 7.30 மணிக்கெல்லாம் 12க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் காணொளிப் பதிவாளர்களும் விஐபி காம்பிளக்ஸ் நுழைவாயிலுக்கு வெளியே திரண்டனர்.
சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க இருந்த சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உள்ள வருகையாளர் பகுதியில் தம் கணவருடன் காத்திருந்தார் இலங்கையரான திருவாட்டி ஃபாத்திமா.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான அத்தம்பதி, இரவு 8 மணிக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றில் தங்கள் மகனை அனுப்பிவைக்க விமான நிலையத்திற்கு வந்தனர். அதோடு, திரு கோத்தபாயவைக் காண அவர்கள் முடிவெடுத்தனர்.
"இலங்கையில் நிலவரம் படுமோசமாக உள்ளது. மக்கள் அவதியுறுவதைக் கண்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம். அந்த வகையில் சிங்கப்பூரில் தங்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்," என்றார் இல்லத்தரசியான திருவாட்டி ஃபாத்திமா.
நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு, வெள்ளை நிற பிஎம்டபிள்யூ, கறுப்பு நிற மெர்சிடிஸ் விட்டோ, கறுப்பு நிற டொயோட்டா அல்ஃபார்ட் ஆகிய மூன்று வாகனங்கள் வளாகத்தில் இருந்து வெளியேறியதைச் செய்தியாளர்கள் கண்டனர். செர்ட்டிஸ் சிஸ்கோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஓட்டுநர்களும் காவல்துறை கார் ஒன்றும் அந்த மூன்று வாகனங்களுக்கு முன்னால் சென்றன. அந்த வாகனங்கள் எதிலும் திரு கோத்தபாய காணப்படவில்லை.
அரசாங்கக் கட்டடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்
இதற்கிடையே, அரசாங்கக் கட்டடங்களில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக இலங்கையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தெரிவித்தனர். எனினும், ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என அவர்கள் சூளுரைத்துள்ளனர்.
"நாங்கள் அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து உடனடியாக அமைதியாக வெளியேறுகிறோம். எனினும், எங்கள் போராட்டம் தொடரும்," என்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான பேச்சாளர் ஒருவர் கூறினார்.
திரு கோத்தபாய அதிபர் பதவியில் இருக்கும்போது இவரைக் கைது செய்ய முடியாது. எனவே, தாம் தடுத்து வைக்கப்படும் சாத்தியத்தைத் தவிர்த்துக்கொள்ள, வெளிநாட்டிற்குச் சென்ற பின்னர் பதவியில் இருந்து விலக இவர் திட்டமிட்டு இருந்ததாக நம்பப்படுகிறது.
அதிபர் மாளிகையைவிட்டு திரு கோத்தபாய வெளியேறியதில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் இவருடைய மாளிகைக்குள் சென்று வந்து உள்ளனர்.
இதற்கிடையே, இலங்கையில் மேற்கு மாநிலங்களில் நேற்று அதிகாலை நீக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் கொழும்பில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

