இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக வளர்ச்சி அடைந்தது. பணவீக்கம் அதிகரித்துவரும் சூழலில் பொருள், சேவைகளுக்கான உலகளாவிய, உள்நாட்டுத் தேவை வலுவிழந்து வருவதை இது குறிக்கிறது.
இதற்கிடையே, சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையை மேலும் கடுமையாக்கியது.
சிங்கப்பூர் வெள்ளி மேலும் வலுவடைய இது வழிவகுக்கிறது. உலகளவில் அதிகரித்துவரும் விலைவாசியின் தாக்கத்தை மட்டுப்படுத்த இது உதவும்.
பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து இருப்பதையும் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கி இருப்பதையும் பார்க்கும்போது, பொருளியல் வளர்ச்சியைவிட அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 4.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட முன்னோட்டக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் பதிவாகி இருந்த 4 விழுக்காடு வளர்ச்சியை இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி விஞ்சினாலும், புளூம்பர்க் கருத்தாய்வில் பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்திருந்த 5.4 விழுக்காடு வளர்ச்சியைவிட இது குறைவு.
பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டதன் அடிப்படையில் முதலாம் காலாண்டுடன் ஒப்புநோக்க, இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளியல் வளர்ச்சி கணிசமாக மெதுவடைந்து இருப்பதை இது காட்டுகிறது.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு மேலும் மிதமடையக்கூடும் என்று நாணய ஆணையம் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு மூலாதாரப் பணவீக்கம் 3 விழுக்காட்டிற்கும் 4 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டு இருக்கும் என தற்போது முன்னுரைக்கப்படுவதாக ஆணையம் கூறியது.
முன்னதாக, பணவீக்கம் 2.5 விழுக்காட்டிற்கும் 3.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டு இருக்கும் என முன்னுரைக்கப்பட்டு இருந்தது.
குறுகியகாலத்தில், மூலாதாரப் பணவீக்கம் 4 விழுக்காட்டுக்குமேல் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் சொன்னது.
"இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்கம் மெதுவடையும் என்றாலும், அது எந்த அளவுக்கு தணியும் என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது," என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஆணையம் அதன் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கி இருப்பது கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு இது நான்காவது முறை. ஆணையத்தின் அடுத்த கொள்கை அறிக்கை அக்டோபரில் வெளியாக இருக்கிறது.

