இந்தியாவிலிருந்து இதுவரை 219,000 பேர் இங்கு வந்தனர்
இவ்வாண்டு சிங்கப்பூருக்கு நான்கு மில்லியன் முதல் ஆறு மில்லியன் சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்து உள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில் 1.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் இங்கு வந்தனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம்.
இந்தோனீசியா, இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுப்பயணிகள் இங்கு அதிகம் வந்து சென்றனர். இந்த நாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள், மொத்த சுற்றுப்பயணிகள் வருகை எண்ணிக்கையில் பாதிக்கு மேல் பங்கு வகித்தனர்.
குறிப்பாக இந்தோனீசியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இங்கு அதிகமானோர் வந்து சென்றனர்.
இந்தோனீசியாவில் இருந்து இங்கு 282,000 பேர் வந்தனர். இந்தியாவில் இருந்து 219,000 சுற்றுப்பயணிகளும் மலேசியாவில் இருந்து 139,000 சுற்றுப்பயணிகளும் இங்கு வந்தனர்.
சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகள், இங்கு தங்கிய சராசரி காலமும் இவ்வாண்டின் முற்பாதியில் அதிகரித்தது. இங்கு அவர்கள் ஏறக்குறைய 7.1 நாள்கள் தங்கியிருந்தனர். ஒப்புநோக்க, 2019ல் இங்கு வந்திருந்த சுற்றுப்பயணிகள், சராசரியாக 3.4 நாள்கள் தங்கியிருந்தனர்.
இவ்வாண்டின் முற்பாதியில் சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்த தொகை ஏறத்தாழ $1.3 பில்லியனை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்த தொகையைவிட இது இரு மடங்கிற்கு மேல் அதிகம்.
எனினும், இவ்வாண்டு இனிவரும் மாதங்களில் சுற்றுப்பயணிகள் இங்கு வந்துசெல்லும் எண்ணிக்கையில் சில சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக பயணத்துறைக் கழகம் கூறியது. உலகளாவிய அரசியல், பொருளியல் சூழலும் சுகாதார நிலவரமும் மாறிக்கொண்டு இருப்பது இதற்குக் காரணம்.
"எஃப்1 கார்ப் பந்தயம், புளூம்பர்க் புதுப் பொருளியல் கருத்தரங்கு போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெற இருப்பதால், முக்கிய சந்தைகளில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வந்துசெல்வர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று கழகம் கூறியது.
சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது, பொழுதுபோக்கு மற்றும் வர்த்தகப் பயணிகளிடையே சிங்கப்பூர் தொடர்ந்து பிரபலமாக இருப்பதைக் காட்டுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் சொன்னார்.
"கொவிட்-19 பெருந்தொற்று நிச்சயமாக இன்னமும் முடியவில்லை. என்றாலும், சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளும் சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு அம்சங்களும் இனிவரும் காலங்களில் சுற்றுப்பயணிகளைத் தொடர்ந்து ஈர்க்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது," என்று அவர் கூறினார்.

