மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் துவாஸ் பாலத்தில் முறையற்ற வகையில் நடந்துகொண்ட இருவரை மலேசிய காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ஜோகூர் சோதனைச்சாவடியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆண் சிங்கப்பூரர்.
கடந்த வாரயிறுதியில் நடந்த
அந்தக் குற்றச்செயல் தொடர்பாக ஆண், பெண் இருவரைத் தேடி வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பாலத்தில் இருந்தபோது தங்கள் சிவப்பு நிற 'கியா' காரை கறுப்பு நிற 'டொயோட்டா' கார் இடை
மறித்து, உரசிச் சென்று சேதப்
படுத்தியதால் கோபமடைந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவரும் தெரிவித்தனர் என மலேசிய அதிகாரிகள் கூறினர்.
சினங்கொண்ட அந்தப் பெண் தமது காரை உரசிச் சென்ற வாகனத்தின் எண் பலகையைப் பெயர்த்தெடுத்து அதன் முன்கண்ணாடி மேல் விட்டெறியும் காட்சி காணொளியில் பதிவானது.
அத்துடன் நின்றுவிடாமல் அந்த வாகனம் அங்கிருந்து போக முடியாதபடி அதை இடைமறித்தார்.
அப்பெண்ணுடன் இருந்த ஆண் அந்த டொயோட்டா காரின் ஓட்டுநரை நோக்கி முறையற்ற செய்கைகளைக் காட்டினார்.
இவற்றைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.

