புருணையில் தெம்புரோங் வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சி நிலையத்திற்கு பிரதமர் லீ சியன் லூங் நேற்று(ஜூலை 15) வருகை புரிந்தார்.
புருணைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ அங்கு பயிற்சி மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் வீரர்களைச் சந்தித்தார்.
பிரதமர் லீயுடன் ஆயுதப்படை தளபதி டேவிட் நீயோவும் உடன் சென்றார் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தற்காப்பு ரீதியாகச் சிங்கப்பூரும் புருணையும் நெருக்கமான நீண்டகால உறவைக் கொண்டுள்ளன என்றும் சிங்கப்பூர் ஆயுதப்படை புருணையில் மேற்கொள்ளும் பயிற்சிகளை அடுத்த மாதத்திலிருந்து நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குக் கட்டங்கட்டமாக மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
வீரர்களிடையே உற்சாகம் மேலோங்கியிருப்பதாகவும் அவர்கள் பயிற்சிகளை மீண்டும் தொடர ஆர்வத்துடன் இருப்பதாகவும் சிங்கப்பூர் ஆயுதப் படையில் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்த திரு. லீ தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

