நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூடப்பட்டு விட்டதால் மலேசியாவில் முட்டை விலை ஏறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குறைவான உற்பத்தி, கோழித்தீவன விலை ஏற்றம், குறைவான அரசாங்க உதவி, விலை உச்சவரம்பு ஆகியன காரணமாகவும் முட்டை விலை ஏறக்கூடும் என மலேசிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
மலேசியாவில் கிட்டத்தட்ட 300 கோழிப் பண்ணைகள் இருந்தன. அவற்றில் சுமார் 40 விழுக்காடு, அதாவது 130 பண்ணைகள் மூடப்பட்டு விட்டன.
எஞ்சியிருக்கும் 170 கோழிப் பண்ணைகளை நடத்துவோரும் கூடுதல் அரசாங்க உதவியை எதிர்பார்க்கின்றனர். கோழித் தீவன விலை இருமடங்கு ஏறிவிட்டதால் தாங்களும் விரைவில் பண்ணைகளை மூடக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் முட்டை ஒன்றுக்கு ஐந்து காசு மானியம் தருகிறது. செலவு அதிகரிப்பால் அந்த மானியம் சரிக்குச் சரியாகி விடுகிறது என்கிறார்கள் அவர்கள்.
மலேசிய கால்நடை வளர்ப்பு பண்ணைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் லீ யூன் யீயு கூறுகையில், இவ்வாண்டு ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் மக்காச்சோளம், சோயா பீன் ஆகியவற்றின் விலைகள் 50 விழுக்காட்டுக்கு மேல் ஏறிவிட்டதாகத் தெரிவித்தார்.
"கோழித்தீவனத்தில் கிட்டத்தட்ட 80% மக்காச்சோளமும் சோயாவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் விலை, கொள்ளைநோய் காலத்திலிருந்தே ஏறி வருவதால் அதனைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம்," என்றும் கூறிய அவர், அதுபற்றி விளக்கினார்.
"கொள்ளைநோய் பரவலுக்கு முன், மக்காச்சோளம் டன் ஒன்றுக்கு 800 ரிங்கிட் (S$252) விலை இருந்தது. கொள்ளைநோய் காலத்தில் அது 1,300 ரிங்கிட் ஆனது. தற்போது மேலும் அதிகரித்து 1,800 ரிங்கிட் ஆகிவிட்டது.
"அதேபோல சோயா விலை 2020 ஜனவரியில் 1,650 ரிங்கிட்டாக இருந்தது. தற்போது அது 2,650 ரிங்கிட்டுக்கு உயர்ந்துவிட்டது.
"பிப்ரவரி 5 முதல் ஜூன் 30 வரை 'சி' கிரேட் முட்டையை 35 காசுகளுக்கு மேல் விற்கக்கூடாது என அரசாங்கம் உச்ச வரம்பு நிர்ணயித்தது. ஆனால், ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 0.45 காசாக அதிகரித்து உள்ளது," என்றார் திரு லீ.

