இலங்கையை மோசமான நிலைக்குத் தள்ளிய பொருளியல் நெருக்கடியைத் தவிர்க்க தம்மால் இயன்றவரை முயன்றதாக பதவி விலகிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்க நேற்று நாடாளுமன்றம் கூடியபோது திரு கோத்தபாய அனுப்பிய பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத் தலைமைச் செயலாளர் தம்மிக்க தசநாயக படித்தார்.
"பொருளியல் நெருக்கடியைத் தடுத்து நிறுத்த என்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். அந்த நோக்கத்துடன் அனைத்துக் கட்சி அரசாங்கம் அல்லது ஐக்கிய அரசாங்கம் அமைக்க எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன்," என்று திரு கோத்தபாய எழுதி இருந்ததாக திரு தசநாயக படித்தார்.
தாம் அதிபர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரே, தவறான நிர்வாகம் காரணமாக பொருளியல் பாழ்பட்டு இருந்ததாகவும் கொவிட்-19 கொள்ளை நோய் நிலவரத்தை மோசமாக்கியதாகவும் திரு கோத்தபாய தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளைநோய் காரணமாக சுற்றுப்பயணிகள் வரத்து நின்றதோடு வெளிநாட்டு ஊழியர்கள் பணம் அனுப்புவதும் குறைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீண்டும் நாளை மறுதினம் (ஜூலை 19) கூடும். அதிபர் பதவி வாக்கெடுப்புக்குத் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளும் பணிகள் அன்றைய தினம் நடைபெறும். மறுநாள், புதன்கிழமை ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும்.
பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுபோல நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் நெருங்கிவிடாத வகையில் நேற்று பாதுகாப்பு பலப்
படுத்தப்பட்டிருந்தது. நாடாளுமன்றக் கட்டடத்திற்குச் செல்லும் சாலைகள் நெடுக துப்பாக்கி ஏந்திய 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஆட்கள் நுழைந்துவிடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடப்பதற்கான அறிகுறி எதுவும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.
மகிந்த, பசில் வெளியேறத் தடை
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவும் ஜூலை 28 ஆம் தேதி வரை அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய வங்கியின் இரண்டு முன்னாள் ஆளுநர்கள் உட்பட மூன்று முன்னாள் அதிகாரிகளுக்கும் இதேபோன்ற தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப் பித்துள்ளது.
முன்னதாக, இலங்கை அமைச்சரவை நேற்று முன்தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்
காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பொருளியல் மீட்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறியதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிலவரம் சிறப்புக்
கட்டுரை - பக்கம் 10

